×

மதுரையில் அமையப் போவது தமிழ் அன்னை சிலையா, ஆரிய மாதா சிலையா? வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2013ம் ஆண்டு மே 14ம் நாள் தமிழ்நாடு சட்டமன்றத்தில், மதுரையில் கட்டிட கலை, கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் தமிழ்த்தாய் சிலை அமையும் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி தமிழக அரசின் ‘பூம்புகார் நிறுவனம்’ தமிழ் அன்னை சிலை வடிப்பதற்கு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிக்கை குறித்து ‘பாரம்பரிய விஸ்வகர்ம ஸ்தபதிகள் மற்றும் சிற்பிகள் பொது நலச் சங்கம்’ சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பி உள்ள வேண்டுகோள் மடல் மூலம் தமிழ் அன்னை சிலை உருவாக்கம் குறித்து அதிர்ச்சிகர செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தமிழ்நாடு அரசின் பூம்புகார் நிறுவனம் வெளியிட்டிருக்கும் அறிவிக்கை, தமிழர்களின் நெஞ்சில் கனலை மூட்டி இருக்கின்றது. “தமிழன்னை வடிவம் கற்சிலையில் கூடாது, பளிங்குக் கல், பைபர், கண்ணாடி ஆகியவை கொண்டு உருவாக்கப்பட வேண்டும். இத்தாலியில் உள்ள ட்ரிவிபுட்டன் சிலையை மாதிரியாகக் கொண்டு வடிவமைக்கப்பட வேண்டும். வேதகால பிராமணிய முறைப்படியும், இந்து கலாச்சார மரபையும், சங்க கால முறையையும் பின்பற்றி சிலை வடித்தெடுக்கப்பட வேண்டும்” என்று பூம்புகார் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

திராவிடர்களின் கட்டிடக் கலை மரபு தென்கிழக்கு ஆசிய நாடுகள் வரையில் பரவிய கீர்த்திமிக்க வரலாற்றுச் சிறப்புக்கு உரியது. ஆனால் பளிங்கு கல், பைபர், கண்ணாடியைக் கொண்டு வேதகால பிராமணிய, இந்து கலாச்சார முறைப்படி தமிழ் அன்னை சிலையை உருவாக்குவோம் என்று திட்டமிடுவது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். அதனால்தான் தமிழ் அன்னை சிலைக்குப் பதிலாக ‘ஆரியமாதா’ சிலை வடித்து, சங்கம் வைத்த மதுரையில் நிறுவிடத் துடிக்கிறார்கள். ‘தமிழ் அன்னை’ சிலையை தமிழக சிற்பிகளைக் கொண்டு கற்சிலையாக மதுரையில் நிறுவிட வேண்டும்.

Tags : Mata ,Tamilnad ,Vaiko , Tamil Mother Goddess, Arya Matha? Vaiko, condemned
× RELATED திருவள்ளூரில் புனித ஆரோக்கிய அன்னை...