நாங்கதான் ஆட்சி அமைப்போம் நாங்கதான் பிரதமரா இருப்போம்: டிஆர்எஸ் திட்டவட்ட அறிவிப்பு

மக்களவை தேர்தல் கடைசி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், 3வது அணி அமைக்கும் முயற்சியில் தெலங்கானா முதல்வரும், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி (டிஆர்எஸ்) கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். பாஜ, காங்கிரஸ் அல்லாத கூட்டணியை உருவாக்குவதே அவரது நோக்கம். குறிப்பாக, காங்கிரஸ் கூட்டணியில் அல்லாத மற்றும் பாஜ.வுக்கு எதிரான மாநில கட்சிகளின் ஆதரவை அவர் திரட்டி வருகிறார். இதற்காக முதலில் கேரள முதல்வர் பினராய் விஜயனை சந்தித்து பேசிய அவர், நேற்று முன்தினம் சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

இந்நிலையில், டிஆர்எஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபித் ரஷூல் கான் நேற்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மத்தியில் மூன்றாவது அணிதான் டிரைவர் சீட்டில் அமர்ந்து, ஆட்சியை வழிநடத்த வேண்டுமென்பதில் சந்திரசேகர ராவ் மிக உறுதியாக உள்ளார். ஒருவேளை, மூன்றாவது அணி ஆட்சி அமைக்க போதிய சீட் கிடைக்காத பட்சத்தில், காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும் ஏற்க தயாராக இருக்கிறோம். அதேசமயம், ஆட்சி அதிகாரம் 3வது அணியிடமே இருக்கும். கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியிலிருந்து ஒருவர் பிரதமர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அது குறித்து ஆலோசனை நடத்தி ஒருமித்த முடிவு எடுக்கப்படும்.

ஆதரவு தொடர்பாக காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம. அதே சமயம், பாஜ.வுடன் எந்த வகையிலும் எங்களின் தொடர்பு இருக்காது. பாஜ வெளியில் இருந்து ஆதரவு தந்தாலும் ஏற்க நாங்கள் தயாராக இல்லை. இம்முறை தேர்தலில் சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக, டிஆர்எஸ் ஆகிய மாநில கட்சிகள் சிறந்த வெற்றியை பதிவு செய்யும். கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் கை ஓங்கி உள்ளது. தற்போது, நாங்கள் அக்கட்சியுடனும், கம்யூனிஸ்ட்களிடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்று கூறப்பட்டுள்ளது.

Tags : TRS , We are the ruler, the prime minister, TRS, the proposal
× RELATED பிரதமர் - சீன அதிபர் வருகை எதிரொலி...