பிரதமர் மோடியை கிண்டலடித்த ராகுல் மழை பெஞ்சா ரேடார்ல இருந்து எல்லா விமானமும் மறைஞ்சிடுமா?

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சமீபத்தில் பேட்டியளித்த பிரதமர் மோடி, ‘பாலகோட் தாக்குதலின் போது, வானம் மேகமூட்டமாக இருந்ததால், பாகிஸ்தான் ரேடாரில் நம் விமானப்படை விமானங்கள் சிக்காமல் எளிதில் தாக்க முடியும் என உடனடியாக அனுமதி அளித்தேன்,’ என்றார். இந்த பேச்சு கடும் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. அரசியல் தலைவர்கள் பலரும் மோடியை கிண்டலடித்து வருகின்றனர்.

இந்நிலையில், மபி.யின் நீமுச் பகுதியில் நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் பேசுகையில், ‘‘வானம் மேகமூட்டமாக இருந்தால், எதிரிநாட்டு ரேடாரில் இருந்து விமானங்கள் மறைந்து கொள்ளலாம் என மோடி கூறுகிறார். அப்படியென்றால், மழை பெய்தால் அனைத்து விமானங்களும் ரேடாரில் மாயமாகி விடும், அப்படித்தானே?’’ என கிண்டலடித்தார்.

மோடி மற்றொரு பேட்டி ஒன்றில், மாம்பழம் சாப்பிடுவது பற்றி கூறியிருந்தார். அதைக் குறிப்பிட்ட ராகுல், ‘‘மாம்பழத்தை எப்படி சாப்பிடணும்னு நீங்க சொல்லி கொடுத்தீங்க. ஆனா, வேலையில்லா இளைஞர்களுக்காக நீங்க என்ன செஞ்சீங்க...?. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகியவை பொருளாதாரத்தை பாதாளத்துக்கு கொண்டு சென்றதுடன், லட்சக்கணக்கானோர் வேலையை பறித்தது’’ என்றார்.

தேச பாதுகாப்பில் சமரசம்:
காங்கிரஸ் ஆட்சியில் 126 ரபேல் போர் விமானங்கள் வாங்க முடிவு செய்திருந்த நிலையில், பாஜ ஆட்சியில் அது 36 ஆக குறைக்கப்பட்டது. அரசின் நிதி நிலையை பொறுத்தே எண்ணிக்கையை குறைத்ததாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்தார். இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா நேற்று தனது டிவிட்டர் பதிவில், ‘கடைசியில் உண்மை வெளிவந்து விட்டது! பணத்திற்காக தேச பாதுகாப்பில் சமரசம் செய்துள்ளனர்’ என விமர்சித்துள்ளார்.

Tags : airplanes ,Rahul , Prime Minister Narendra Modi, Kundalit Rahul, Rain, Flight. Maraincituma?
× RELATED சூலூர் விமானப்படை தளத்தில்...