×

வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய அடுக்குமாடி குடியிருப்பில் அதிமுகவினர் பணம் பதுக்கல்: வருமான வரித்துறை வராததால் பறக்கும் படையும் நழுவியது

மதுரை: வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய மதுரையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால், வருமான வரித்துறையினர் வராததால் பறக்கும் படையினர் சோதனை நடத்தாமல் திரும்பி சென்றனர். தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனைகளில் கடந்த மாதம் முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இடைத்தேர்தலில் பணியாற்றும் அதிமுகவினர் மதுரை பொன்மேனியில் உள்ள தனியார் பள்ளி மற்றும் அதன் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளனர். அவர்களது அறைகளில்   திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்ய பணம் பதுக்கி வைத்திருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதையடுத்து பறக்கும் படை அதிகாரி முருகஜோதி தலைமையில், திலகர் திடல் போலீஸ் உதவி கமிஷனர் வெற்றிச்செல்வன் உள்பட அதிகாரிகள் நேற்று பொன்மேனியில் உள்ள தனியார் பள்ளியில் சோதனை நடத்த சென்றனர். அப்போது பள்ளியில் அதிமுகவினர் யாரும் தங்கவில்லை. அதன் அருகே உள்ள அபார்ட்மென்ட்டில் தான் தங்கியுள்ளனர் என தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து பறக்கும் படையினர், போலீசார் அங்கு சென்றனர். வருமான வரித்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். பகல் 12 மணியில் இருந்து, மாலை 3 மணி வரை பறக்கும் படை குழுவினர் மற்றும் போலீசார் காத்திருந்தனர். 3 மணிநேரமாகியும் வருமான வரித்துறையினர் யாரும் வரவில்லை. இதை தொடர்ந்து பறக்கும் படையினர் சோதனை செய்யாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அவர்களைத்தொடர்ந்து போலீசாரும் சென்றுவிட்டனர்.

பணம் பதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்தால், உடனடியாக பறக்கும் படையினருடன் வருமான வரித்துறையினரும் இணைந்து சோதனை நடத்தினால்தான் பணம் பதுக்கப்பட்டுள்ளதா அல்லது வேறு இடத்தில் பணப்பட்டுவாடா செய்வதற்கென திசை திருப்பும் முயற்சியா என்பது தெரிய வரும். ஆனால், வருமான வரித்துறையினர் வராததால் சோதனை கைவிடப்பட்டிருப்பது, பணப்பட்டுவாடாவை தடுக்க ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை என்பதையே காட்டுகிறது. தேர்தல் தலைமை அதிகாரி இதன்பேரில் விசாரித்து நடவடிக்கை எடுப்பது அவசியமென எதிர்க்கட்சியினர் தெரிவித்தனர்.


வாடகை வீடுகளில் அதிமுக, அமமுகவினர்

மதுரை பொன்மேனி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 8 வாடகை வீடுகளில், 3 வீடுகளில் காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் எம்பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தங்கியிருந்து, திருப்பரங்குன்றம் தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தங்கியுள்ள வீடுகளின் எதிரே அமமுகவினரும் வாடகை வீடுகளில்  தங்கியுள்ளனர். அந்த ரோட்டில் அதிமுக, அமமுகவினர் கார்கள் வந்து சென்றவண்ணம் உள்ளது. பறக்கும்படை குழு சோதனை போடவந்த தகவல் தெரிந்தும், அதிமுகவினர் வழக்கம் போல், வீட்டை விட்டு வெளியே செல்வதும், வருவதுமாக இருந்தனர்

Tags : apartment building ,voters , Voter, AIADMK, cash hoardings, income taxes, flying forces
× RELATED சட்டமன்ற உறுப்பினர்கள்...