×

ராணுவ வீரர்கள், தூதர்களின் தபால் வாக்கு மின்னணு முறையில் மாற்றுவது எப்படி?: பயிற்சியில் அனைத்து மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு

சென்னை: ராணுவ வீரர்கள், தூதரக அதிகாரிகள் மற்றும் வேலை நிமித்தமாக மத்திய பணிக்கு சென்றவர்களின் தபால் வாக்குகளை மின்னணு வாக்குகளாக மாற்றி எண்ணுவது தொடர்பாக 32 மாவட்டங்களைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த  ஏப்.18ம் தேதி நடந்தது. இதை தவிர்த்து திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஓட்டப்பிடாரம், சூலூர் ஆகிய 4 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19ம் தேதி நடக்கிறது. ெதாடர்ந்து 38 நாடாளுமன்ற தொகுதிகள், 22 சட்டசபை தொகுதிகளில் பதிவான வாக்குகள் மே 23ம் தேதி எண்ணப்பட உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகளுக்கும் நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள அம்மா மாளிகையில் பயிற்சி முகாம் நடந்தது. கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் பாலாஜி தலைமையில் நடந்த முகாமில் இணை தலைமைத் தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப், மாநகராட்சி துணை ஆணையரும் மாவட்ட கூடுதல் தேர்தல் அலுவலருமான  கோவிந்த ராவ், 32 மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்களின் நேர்முக உதவியாளர் (தேர்தல்), தபால் வாக்குகளை மின்னணு முறையில் மாற்றும் முறையை கையாளும் முன்னோடி அலுவலர்கள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு முன்னோடி அலுவலர்கள், மாவட்ட கணினி நிகழ்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் தொடர்பாகவும் வாக்குப்பதிவு இயந்திரங்களை எப்படி கையாள வேண்டும், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, விவிபேட் இயந்திரங்களில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எவ்வாறு எண்ண வேண்டும் என்பது தொடர்பாகவும் பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக நாட்டிற்கு வெளியிலுள்ள தூதரக அதிகாரிகள், ராணுவ வீரர்கள், மாநிலத்துக்கு வெளியில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் போன்றவர்கள் வாக்களித்த தபால் ஓட்டுக்களை மின்னணு முறையில் மாற்றுவதற்கான புதிய நடைமுறையை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.

இது தவிர, ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாகவும், நாடாளுமன்ற தொகுதி வாரியாகவும், வாக்கு எண்ணும் பொழுது, ஒவ்வொரு சுற்று முடிவில் சுவிதா என்ற தேர்தல் ஆணையத்தின் செயலி மூலம் வாக்கு எண்ணிக்கை விவரத்தை பதிவு செய்தல், பதிவு செய்யப்பட்ட வாக்கு விவரங்களை மாநில தலைமைத் தேர்தல் அலுவலருக்கும், இந்திய தேர்தல் ஆணையத்திற்கும், படிவம் 20ஐ பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் எப்படி அனுப்ப வேண்டும் என்பது தொடர்பாகவும் விரிவாக பயிற்சி வழங்கப்பட்டது.

Tags : military personnel ,diplomats ,district officials , Soldiers, postal voting, officials participation
× RELATED நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு...