×

ஆந்திர முதல்வர் சந்திரபாபுவுடன் துரைமுருகன் திடீர் சந்திப்பு

திருமலை: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் திடீரென சந்தித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநில தலைநகர் அமராவதி தலைமை செயலகத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும் வேலூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்டவருமான கதிர் ஆனந்த் ஆகியோர் நேற்று சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது.

நாடு முழுவதும் நடந்த மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் 23ம் தேதி நடைபெற உள்ளது. அப்போது தற்போதைய பாஜ அரசு நீடிக்குமா அல்லது மாற்று அரசு அமையுமா என்பது தெரிந்து விடும். இந்த நிலையில் பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே திமுக பொருளாளர் துரைமுருகன் - முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சந்திரபாபு நாயுடு, பாஜவிற்கு எதிரான எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்க்கும் விதமாக நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதற்காக ஏற்கனவே சந்திரபாபு நாயுடு மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு ஆதரவாகவும் கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகவும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவாகவும் பிரசாரம் மேற்கொண்டார்.

இதேபோன்று தமிழகத்திற்கு வந்து திமுகவிற்கு ஆதரவாக சென்னையில் பிரசாரமும் மேற்கொண்டார். நேற்று முன்தினம் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசிய நிலையில், நேற்று திமுக பொருளாளர் துரைமுருகன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து பேசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இது அரசியல் தொடர்பானது அல்ல என்றும், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Tags : Duraimurugan ,meeting ,Chandrababu ,Andhra Pradesh , Andhra CM, Chandrababu, Duraimurugan, sudden meeting
× RELATED அரசு விழாவில் முதல்வர் பழனிசாமி...