×

மோடியை ‘நீச் ஆத்மி’ என்று நான் கூறியது சரியானதுதான்: மணி சங்கர் அய்யர் மீண்டும் சர்ச்சை

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மணி சங்கர் அய்யர், கடந்த 2017ம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தை முன்வைத்தார். அப்போது, ‘இழிவான மனிதர்’ என பொருள்படும் வகையில் பிரதமர், ‘நீச் ஆத்மி’ என்று அவர் குறிப்பிட்டார். இதற்கு, பாஜ கடுமையான கண்டனம் தெரிவித்தது.

இதனையடுத்து, மணி சங்கர் அய்யரை கடுமையாக கண்டித்த கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அவரை சஸ்பெண்ட் செய்தார். சில மாதங்களுக்கு பின்னர் அவர் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அதே ‘நீச் ஆத்மி’ என்ற வார்த்தையை மீண்டும் கூறியுள்ள மணி சங்கர் அய்யர், புதிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.  

காஷ்மீரின் ‘ரைசிங் சன்’ என்ற பத்திரிக்கையில் மணி சங்கர் அய்யர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில், மோடியை தான் ‘நீச் ஆத்மி’ என்று குறிப்பிட்டதை நியாயப்படுத்தி உள்ளதோடு, மிக மோசமான வார்த்தைகளை பேசுபவர் என்றும் அவரை விமர்சித்துள்ளார். இந்த கட்டுரையில், ‘பிரதமர் மோடியை மே 23ம் தேதி மக்கள் எப்படியும் வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள். இந்த நாடு பார்த்த, உளறுவாய் பிரதமரின் ஆட்சி காலம் முடிவுக்கு வருகிறது. நான் 2017ம் ஆண்டு டிசம்பரில் என்ன கூறினேன் என நினைவிருக்கிறதா? நான் என்ன தீர்க்கதரிசியா?’ என்றுமணி சங்கர் அய்யர் குறிப்பிட்டுள்ளார்.

மணி சங்கரின் இந்த விமர்சனத்துக்கு பாஜ கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜ செய்தி தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் தனது டிவிட்டர் பக்கத்தில், ‘அய்யர் அவதூறுகளின் தலைவர். 2017ம் ஆண்டு பேச்சை நியாயப்படுத்தியுள்ளார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். சரியாக தெரியாத இந்தியின் பின்னால் அவர் பதுங்கி கொண்டிருக்கிறார். தற்போது அவர் தன்னை தீர்க்கதரிசி என்கிறார்,’ என்று பதிவிட்டுள்ளார்.

தனிப்பட்ட கருத்து:
பிரதமர் பற்றி மணி சங்கர் அய்யர் கூறியிருப்பது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்வீர் ஷெர்கில் கூறுகையில், மணி சங்கர் அய்யரின் கருத்தை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை. அது, அவரது தனிப்பட கருத்து. முன்னாள் பிரதமர்கள் ராஜிவ் காந்தி, இந்திரா காந்தி குறித்த பேச்சுக்காக பிரதமர் மோடிதான் வெட்கப்பட வேண்டும். மிக மோசமான வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்,’’ என்று கூறினார்.

Tags : Modi ,Aadmi Aadmi': Mani Shankar Aiyar , Modi's 'You Aadmi', Mani Shankar Aiyar, controversy
× RELATED மோடி அரசால் சீரழிக்கப்பட்ட...