பி.இ.,பி.டெக் 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை 20ல் இருந்து 10 சதவீதமாக குறைப்பு: தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு

சென்னை: பி.இ.,பி.டெக் 2ம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைத்து தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 570 பொறியியல் கல்லூரிகளில் பி.இ.,பி.டெக் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையானது ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. லேட்டரல் என்ட்ரி எனப்படும் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ முடித்தவர்களும், பி.எஸ்சி முடித்தவர்களும் விண்ணப்பித்து சேரலாம்.

கடந்த ஆண்டு வரை நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு என்று ஒரு கல்லூரியில் உள்ள மொத்த இடங்களில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. கடந்த சில ஆண்டுகளாக டிப்ளமோ முடித்த மாணவர்கள்  நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கையில் ஆர்வம் காட்டவில்லை. இதனால், பெரும்பாலான இடங்கள் காலியாகவே இருந்தன. இந்நிலையில், வரும் கல்வியாண்டு முதல் (2019-2020) நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு 10 சதவீத இடங்கள் மட்டுமே ஒதுக்கப்படும் என்று தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் அரசாணை வெளியிட்டுள்ளது. பி.இ.,பி.டெக் படிப்புகளில் நேரடி இரண்டாம் ஆண்டு படிப்பதற்கான கலந்தாய்வு வருகிற ஜூன் மாதத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : B.Tech ,Technical Education Directorate , BE, B.Tech, Student Admission, Technical Education Directorate
× RELATED கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும்...