×

மறுவாக்குப்பதிவு தேர்தல்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக கூட்டணி திட்டம்: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

சென்னை: மறுவாக்குப்பதிவு தேர்தல்களில் வாக்குச்சாவடிகளை கைப்பற்ற அதிமுக கூட்டணி கட்சியினர் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில துணை தலைவர் தாமோதரன், மூத்த வழக்கறிஞர்கள் எஸ்.கே.நவாஸ், கோடி ஆகியோர் நேற்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர்.
 அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நடைபெற உள்ள மறுவாக்குப்பதிவு தேர்தல்களில் அதிமுக, பாஜ, பாமக உள்ளிட்ட கட்சியினர், அவர்களுடைய ஆட்கள் மற்றும் பணபலம்  மூலமாக வாக்குச்சாவடிகளை கைப்பற்ற திட்டங்கள் தீட்டி வருவதாக எங்களுக்கு செய்திகள் வருகின்றன. எனவே நடைபெற உள்ள மறு வாக்குப்பதிவு தேர்தல்களில் துணை ராணுவப்படை மூலம் வாக்குச்சாவடிகளுக்கு பாதுகாப்பு, பொதுமக்கள் அச்சமின்றி சுதந்திரமாக வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும்.


 வெப்கேமிரா மூலம் வாக்குச்சாவடிகளின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிக்க வேண்டும். ஒவ்வொரு வாக்குச் சாவடிகளுக்கும் தனித்தனியாக சிறப்பு பார்வையாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். தேர்தல் நடைபெறுகின்ற வாக்குச்சாவடிகளில் ஏற்கனவே கடந்த 18ம்தேதி நடைபெற்ற  வாக்குப்பதிவின் போது நியமிக்கப்பட்ட வாக்குச்சாவடி அதிகாரிகளை நியமிக்காமல் புதிதாக வாக்குச்சாவடி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். வாக்காளர்கள் சுதந்திரமாக அச்சமின்றி வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடி முகவர்கள் இடையூறாக இருந்தால் அவர்களை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். வாக்குச்சாவடியில் அனுமதி  பெற்ற நபர்களை தவிர்த்து வெளியாட்கள் யாரையும் 200 மீட்டர் தூரத்திற்கு உள்ளே அனுமதிக்க கூடாது. இந்த புகார்களை தேர்தல் ஆணையம் கவனத்துடன் பரிசீலித்து நடுநிலையுடன் பொதுமக்கள் எந்தவித அச்சமுமின்றி வாக்களிக்க வழிவகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.  இந்த மனுவை படித்து பார்த்த தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, இந்த புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகளிடம் உறுதியளித்தார்.


Tags : Congress ,Election Commission , Reconciliation, AIADMK, Congress complained
× RELATED சசி தரூருக்கு தேர்தல் ஆணையம்...