×

ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு மலப்புரம் வாலிபர் கைது: காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் மலப்புரம் அருகே ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேஸ்புக் உள்பட சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்த வாலிபரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பிறகு கேரளா, தமிழ்நாடு உள்பட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஐஎஸ் தீவிரவாத இயக்க ஆதரவாளர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கேரள மாநிலம் பாலக்காடு, காசர்கோடு மற்றும் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் உள்பட பல பகுதிகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) திடீர் சோதனை நடத்தியது.

இதில், பாலக்காட்டை சேர்ந்த ரியாஸ் அபுபக்கர் உள்பட 3 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கேரளாவிலும் தற்கொலைப்படை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இந்த நிலையில் மலப்புரம் மாவட்டம் மஞ்சேரி களத்திங்கல்படியை சேர்ந்த அஸ்கர் (47), ஐஎஸ் இயக்கத்துக்கு ஆதரவாக பேஸ்புக் உள்பட சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மஞ்சேரி போலீசார் அஸ்கரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவருக்கு ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த இயக்கத்திற்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டதும் உறுதி செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு போலீசார் மஞ்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் அஸ்கரை ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அஸ்கரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து அவர் மஞ்சேரி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதில் முக்கிய தகவல்கள் பல வெளியாகலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் மத்திய உளவுத்துறை போலீசாரும் அஸ்கரிடம் விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Tags : Detainee ,IS Operation Malappuram , IS Movement, contact, Malappuram youth, arrested
× RELATED தூத்துக்குடி முறப்பநாடு விஏஒ லூர்து...