வெளிநாட்டு நிதி கணக்குகளை தராததால் இன்போசிஸ் அறக்கட்டளை அங்கீகாரம் அதிரடி ரத்து: மத்திய அரசு நடவடிக்கை

புதுடெல்லி: இன்போசிஸ் அறக்கட்டளை  அங்கீகாரத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. நாட்டில் உள்ள அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை, நிதியை பெறுவதற்காக வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு இருக்க வேண்டும்.  இதன்படி, வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதிக்கு ஆண்டு தோறும் வரவு - செலவு கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்பிக்க வேண்டும்.

இந்நிலையில், முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இன்போசிஸ் அறக்கட்டளை கடந்த 6 ஆண்டுகளாக தனது வெளிநாட்டு நிதி தொடர்பான வரவு - செலவு கணக்குகளை தாக்கல் செய்யாததால் அதன் அங்கீகாரத்தை ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து கடந்த ஆண்டு இன்போசிஸ் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் பதில் இல்லை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 இது குறித்து இன்போசிஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கடந்த 2016ம் ஆண்டு ஜனவரியில் வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் இன்போசிஸ் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டது.

ஆனால், அதே ஆண்டு மே மாதம் இந்த சட்டத்தின் கீழ் மத்திய அரசு சில திருத்தங்களை மேற்கொண்டது. இதன்படி, இன்போசிஸ் அறக்கட்டளை  வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட வரம்பிற்குள் வரவில்லை. எனவே, இந்த சட்டத்தின் கீழ் செயல்படுவதில் இருந்து விலக்கு பெறும் வகையில் தனது அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி அதே ஆண்டு ஜூனில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இன்போசிஸ் விண்ணப்பித்தது. அதே நேரத்தில் 2016, 2017, 2018ம் ஆண்டு வரவு செலவு கணக்குகளை இன்போசிஸ் அறக்கட்டளை சமர்பித்தது. மேலும், எந்த வெளிநாட்டு நிதியையும் பெறவில்லை என்பதற்கான ஆவணங்களும் வழங்கப்பட்டுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>