×

படகுகளுக்கு ஏற்படும் சேதங்களை தவிர்க்க மல்லிப்பட்டினம் புதிய துறைமுகத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டும்: மீனவர்கள் கோரிக்கை

சேதுபாவாசத்திரம்: தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் அருகில் உள்ள மல்லிப்பட்டினம் பழைய மீன்பிடி துறைமுகத்தையும், கடற்கரையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடங்களையும் இடித்து அப்புறப்படுத்தி விட்டு ரூ.66  கோடியில் புதிய துறைமுக கட்டுமான பணிகள் துவங்கப்பட்டது. தற்போது 95 சதவீத பணிகள் நிறைவடைந்து  உள்ளது. இந்த துறைமுகத்தில் படகுகள் பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் தூண்டில் வளைவு அமைக்கவில்லை.  எனவே துறைமுகம் திறப்பதற்கு முன் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த வருடம்  கஜா புயலில் படகுகளுக்கு ஏற்பட்ட சேதம்போல் எப்போதும் ஏற்பட்டது கிடையாது.  ஏனென்றால் பழைய துறைமுகம், படகுகளுக்கு பாதுகாப்பான முறையில் அமைந்திருந்தது.

ஆனால் தற்போது அமைக்கப்பட்டுள்ள துறைமுகம் எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் வெட்டவெளி துறைமுகம்போல் அமைத்துள்ளதால் தான் கஜா புயல் படகுகளை் சூறையாடி சின்னாபின்னப்படுத்தி மீனவர்களுக்கு பெரும்  இழப்பை ஏற்படுத்தியது.இந்த துறைமுகத்திற்கு தூண்டில் வளைவு அமைத்தால் தான் படகுகளை பாதுகாப்பாக வைத்திருக்க முடியும். துறைமுக கட்டுமான பணிகள் துவங்கும் முன் தூண்டில் வளைவு அமைக்கப்படும் என  உறுதியளித்த அதிகாரிகள், அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டனர் என்று மீனவர்கள் குறை கூறுகின்றனர். எனவே துறைமுகம் திறக்கப்படும் முன் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென மீனவர்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

இதுகுறித்து விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜூதீன் கூறும்போது: தஞ்சை மாவட்டத்தில் 45 கிலோ மீட்டர் நீளத்தில் கடற்கரை உள்ளது. தற்போது மல்லிப்பட்டினத்தில் பெரிய துறைமுகம் அமைக்கப்படுகிறது. அதேநேரம் படகுகளை கஜா புயல் சூறையாடி சென்றதற்கும் இந்த துறைமுகம் தான் காரணம். துறைமுக கட்டுமான பணிகள் துவங்குவதற்கு முன் ரூ.6 கோடியில் படகுகளுக்கு பாதுகாப்பு ஏற்படும் வகையில் தூண்டில் வளைவு  அமைக்கப்படுமென அதிகாரிகள் உறுதியளித்தனர். ஆனால் இதுவரை அப்படியே கிடப்பில் போட்டு விட்டனர். கஜா புயலுக்கு பின் கடலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அலைகள் உயரமாகவும், எப்போதையும் விட சீற்றமாகவும்  உள்ளது. மீண்டும் நிவாரணம் கிடைத்து மீனவர்கள் படகுகள் தயார் செய்தாலும் இந்த துறைமுகத்தில் படகுகளை பாதுகாக்க முடியாத நிலை தான் உள்ளது.  எனவே துறைமுகம் திறக்கப்படும் முன் தூண்டில் வளைவு  அமைத்துத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : Fishermen ,New Harbor , Boats, Mallipattinam new harbor, bait curve, fishermen, request
× RELATED இலங்கை சிறையிலிருந்து...