×

சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் குப்பைகளை கொட்ட வேண்டும்: வடக்கநந்தல் பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை

சின்னசேலம்: வடக்கநந்தல் பேரூராட்சி பகுதி குப்பைகளை இதர இடங்களில் கொட்டி நோய் பரப்பாமல், திடக்கழிவு மேலாண்மை கிடங்கிலேயே கொட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம்  மாவட்டம் வடக்கநந்தல் பேரூராட்சியில் அக்கராயபாளையம், கச்சிராயபாளையம், மேட்டுப்பாளையம், அம்மாபேட்டை, வெங்கட்டம்மாபேட்டை ஆகிய கிராமங்கள் உள்ளன. இதில் கச்சிராயபாளையம், வடக்கநந்தல்,  அக்கராயபாளையம் பகுதியை சேர்ந்த தெருக்களில் சேரும் குப்பைகளை சேமித்து தரம் பிரிக்கும் வகையில் அக்கராயபாளையம் பெரிய குன்றுக்கு அருகில் வடக்கநந்தல் பேரூராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை  கிடங்கு உள்ளது. குப்பைகளை தரம் பிரிக்க பெண் தொழிலாளர்களும் உள்ளனர். ஆனால் அங்கு குறைந்த அளவு குப்பைகளை மட்டுமே கொட்டி தரம் பிரிப்பதாக தெரிகிறது.

மீதி உள்ள குப்பைகளை அக்கராயபாளையம் புதுகாலனி அருகில் உள்ள குன்றுமேட்டின் அடிவாரத்தில் உள்ள பள்ளத்தில் கொட்டி வருகின்றனர். இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் குப்பைகளும் அடக்கம். குப்பைகள் சேர்ந்த பின்பு  அதை தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. அந்த வழியே செல்லும் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுகிறது. இதனால் நுரையீரல் சம்பந்தமான நோய் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.  இதனால் இந்த இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டாம் என்று அக்கராயபாளையம்  இளைஞர் சங்கத்தை சேர்ந்த ஏழுமலை, ஜெயவேல், சிட்டிபாபு, கவிமணி உள்ளிட்ட இளைஞர்கள் பேரூராட்சி வண்டியை மறித்து  வாக்குவாதம் செய்தும், பேரூராட்சியிடம் குப்பையை வேறு இடத்தில் கொட்ட வேண்டும் என மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் நோய்  பரவும் அபாயமும் உள்ளது. எனவே சுற்றுசூழல் மாசுபடுவதை தடுக்கும் பொருட்டு பேரூராட்சி குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை கிடங்கிலேயே கொட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கலெக்டருக்கு கோரிக்கை  விடுத்துள்ளனர்.


Tags : Environmental, Sewerage Management, Lubricants, North Western Panchayat Public
× RELATED கோவை மாவட்டம் முண்டாந்துறை...