×

கொடி கட்டி பறக்கும் கஞ்சா விற்பனை: குமரியில் ஒரே நாளில் 8 பேர் கைது

நாகர்கோவில்: குமரியில் கஞ்சா விற்பனை தொடர்பாக ஒரே நாளில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது. பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என பல  தரப்பினரும் கஞ்சாவுக்கும் அடிமையாகி வருகிறார்கள். சில பெட்டிக்கடைகளிலும், குளிர்பான கடைகளிலும் கூட கஞ்சா விற்பனை கும்பல் நின்று கொண்டு இளைஞர்களுக்கு சப்ளை செய்து வருகிறார்கள். குறிப்பாக  நாகர்கோவிலில் அதிகளவில் கஞ்சா புழக்கத்துக்கு வந்துள்ளது. இரவு நேரங்களில் வரும் பஸ்கள், ரயில்களில் வெளி மாவட்டங்களில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து அதை விற்பனை செய்து வருகிறார்கள். காவல் துறையினர்  அவ்வப்போது கைது நடவடிக்கை எடுத்தாலும் கூட கஞ்சா விற்பனையாளர்கள் ஜாமீனில் வந்தவுடன் மீண்டும் தனது விற்பனையை தொடங்கி விடுகிறார்கள். குண்டர் சட்டத்தில் காவல்துறையினர் கைது நடவடிக்கை எடுத்தாலும்  இவர்கள் தங்களது விற்பனையை விடுவதில்லை. இந்த நிலையில் கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி. ஸ்ரீநாத் உத்தரவிட்டார்.

அதன்படி தற்போது மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் கஞ்சா புகைக்க பழகி, பின் வியாபாரிகளாக மாறி உள்ளனர். அந்த வகையில் புதுக்கடை  அருகே உள்ள பைங்குளம் பகுதியில் நேற்று அதிகாலையில் சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த 4 பேரை பிடித்து போலீசார்  விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தக்கலை பத்மநாபபுரத்தை சேர்ந்த அஜித் (23), கலிங்கராஜபுரம் பகுதியை சேர்ந்த அஜ்மல் (19), தேங்காப்பட்டணம் பகுதியை சேர்ந்த நிஷாந்த் (21), தக்கலை சாரோடு பகுதியை  சேர்ந்த ராம்பிரகாஷ் (19) என்பது தெரிய வந்தது. இவர்களிடம் நடந்த சோதனையில் 75 கிராம் கஞ்சா  வைத்து இருந்தது தெரிய வந்தது.

இதே போல் வடசேரி இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் தலைமையில் குன்னுவிளை சந்திப்பில் போலீசார் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக  வந்த அருகுவிளை யாதவர் மேல தெருவை சேர்ந்த மகேஷ்   (30) என்பவரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். இதில் அவர் கஞ்சா விற்பனை செய்பவர் என்பது தெரிய வந்தது. அவரிடம்  இருந்து சுமார் ஒன்றேகால் கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கோட்டார் பகுதியிலும் கஞ்சா விற்பனை கும்பலை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Tags : India ,Kumari , Flag flying, cannabis sale, Kumari, arrested
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!