×

மழை வரும்போது ரேடாரில் இருந்து விமானங்கள் மறைந்துவிடுமா? : ராகுல்காந்தி கேள்வி

போபால் : மழை வரும்போதெல்லாம் ரேடாரில் இருந்து விமானங்கள் மறைந்துவிடும் என பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கிண்டல் செய்துள்ளார். மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பீகார், உத்தரப்பிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடைசி கட்டமாக வரும் மே 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மத்திய பிரதசேத்தில் இறுதிக்கட்ட பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஈடுபட்டு வருகிறார். பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், பால்கோட் தாக்குதலின்போது இந்திய விமானங்கள் பாகிஸ்தானின் ரேடாரில் இருந்து தப்பித்து வருவதற்கு மேகங்கள் உதவின என பிரதமர் மோடி கூறியதை குறிப்பிட்டு கடுமையாக விமர்சித்தார்.

இந்தியாவில் எப்போது மழை பெய்தாலும் ரேடாரில் இருந்து அனைத்து விமானங்களும் மறைந்துவிடுமா மோடி ஜி என கிண்டலாக ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது வான்வழி தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த போது வானிலை மோசமாக இருந்ததால் மோடியிடம் விமானப்படை தளபதி யோசனை கேட்டுள்ளார். மோசமான வானிலையின் போது ரேடார் வேலை செய்யாது என அவருக்கு மோடி அறிவுரை கூறியுள்ளார்.

இதனையடுத்து பாலகோட் முகாம்கள் மீது போர் விமானங்கள் தாக்கியதாக மோடி கூறுவதாகவும், இந்தியாவில் மழை காலத்தில் ரேடார் கண்காணிப்பில் இருந்து விமானங்கள் விலகி விடுமா என கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி, இதுகுறித்து பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து விமர்சித்துள்ள பிரியங்கா காந்தி, நமது நாட்டின் பிரதமர் ஒரு மிகப்பெரிய பாதுகாப்பு துறை வல்லுநர் என்றும், அவரே இந்த நாட்டின் பாதுகாப்பு துறைக்கு தேவையான விமானங்களை யார் உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை கூட தீர்மானித்து விடுவார் என கூறியுள்ளார். மேலும் வாழ்க்கையில் ஒரு விமானத்தை கூட தயாரிக்காத நிறுவனத்திற்கு விமானம் தயாரிக்கும் ஒப்பந்தத்தை தூக்கி தருவார், மேக மூட்டம் இருந்தால் போர் விமானங்களை, எதிரி நாட்டு ரேடார் கருவிகள் கண்டுபிடிக்க முடியாது என்றும் தீர்மானிப்பார் என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.


Tags : flights , Rain,Radar,Flights,Rahul Gandhi,PM Modi
× RELATED சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை என 8 விமான சேவைகள் ரத்து