×

கோடை வெயிலால் சின்னாளபட்டி சுங்குடி சேலை தயாரிப்பு தீவிரம்

* ‘பாட்லி’ ரகத்திற்கு மாணவிகள் வரவேற்பு


செம்பட்டி : கோடை வெயில் கொளுத்தி வருவதால் சின்னாளபட்டியில் சுங்குடி சேலை தயாரிப்பு அதிகமாகியுள்ளது. தாவணி அணிந்ததுபோல் டிசைன் உள்ள பாட்லி ரக சேலைகளுக்கு மாணவிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தமிழகத்தில் சுங்குடி நகரம் என்றாலே சின்னாளபட்டிதான். இந்தளவிற்கு பிரபலமாக காரணம் உலகம் முழுவதும் விற்பனையாகும் சுங்குடி புடவைகளில் அதிகளவு சின்னாளபட்டியில் தயாரானதே ஆகும். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக வட்டம், சதுர வண்ண புள்ளிகளை சேலைகளில் பதித்து சுங்குடி சேலை என பெயர் வைத்து விற்பனை செய்து வந்தனர்.

alignment=


இதனால் வயதானவர்கள் மட்டும் அணியக்கூடியதாக இருந்த சுங்குடி சேலை தற்போது நாகரிகத்திற்கேற்ப இளசுகளையும் கவரும் விதமாக பல வண்ணங்களில் தயார் செய்யப்பட்டன. பின்னர் கம்ப்யூட்டர் உதவியுடன் மான், மயில், நடன மங்கை, யானை, சிங்கம் உள்ளிட்ட விலங்குகளின் உருவங்கள் மற்றும் பல வித பூக்கள் மாடர்ன் ஆர்ட் ஓவிங்களை சேலைகளில் பதிவு செய்து விற்பனை செய்து வருகின்றனர்.

முன்பு சுங்குடி சேலைகளில் 2 வண்ணங்கள்தான் (பார்டர் மற்றும் உடல் பாகம்) இருந்தது. ஆனால் தற்போது 3 முதல் 4 வண்ணங்களில் சுங்குடி சேலைகளை தயாரித்து விற்பனை செய்து வருவதால் இப்புடவைகளுக்கு இந்தியா முழுவதும் தனி கிராக்கி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வடமாநிலங்களான கொல்கத்தா, மும்பை, பீகார், ஒடிசா போன்ற ஊர்களுக்கு தினசரி புடடைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

மேலும் வங்கதேசம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மேலும் சின்னாளபட்டியில் தற்போது கல்லூரி மாணவிகள் விரும்பி அணியும் வண்ணம் கொடி, புளோரோசென்ட் மை மூலம் புதிய ரக பாட்லி புடவைகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். இச்சேலையை உடுத்தினால் மாணவிகள் தாவணி அணிந்ததுபோல் டிசைன்கள் தெரியும் வண்ணம் அமைத்துள்ளனர். இதற்கு மாணவிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து சுங்குடி சேலை உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘திருப்பூர், சோமனூர் ஊர்களிலிருந்து நம்பர் 80, 100 காட்டன் காக்கி நிற பீஸ்களை வாங்கி வந்து அதை மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் உள்ள சாய பட்டறைகளில் பிளீச்சிங் எனப்படும் சலவை செய்வோம். பின்னர் அதை தும்பை பூவை போல சுத்தம் செய்து அவற்றில் பலவித வண்ணங்களை (கலர்களை) ஏற்றி கம்ப்யூட்டர் மூலம் நவீன டிசைன்களை உருவாக்கி மில்ரகங்களுக்கு இணையாக சுங்குடி புடவைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகின்றோம்’ என்றனர்.

சுங்குடி சேலைகளை தேய்க்கும் தொழிலாளர்கள் கூறுகையில், ‘முன்பு சின்னாளபட்டியில் சாயப்பட்டறை செயல்பட்ட போது அதிகளவில் சுங்குடி சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டன. தற்போது மதுரை உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் சுங்குடி சேலைகளுக்கு சாயம் ஏற்றி இங்கு கொண்டு வந்து பட்டறைகளில் பிரிண்டிங் செய்யப்படுகிறது. அதை நாங்கள் வெயிலில் உலர வைக்கும் போது பட்டறைகளில் சேர்க்கப்படும் மை வாசம் போய்விடும். அதன்பின் ஜவ்வரிசி, டினோபால் கலந்த சுடுதண்ணீரில் புடவைகளை நனைத்து மீண்டும் வெயிலில் உலர வைத்து அவற்றிற்கு தண்ணீர் மூலம் பதம் சேர்த்து அதிக எடைகொண்ட சிறப்பு சலவை பெட்டிகள் மூலம் தேய்த்து கடைகளுக்கு கொண்டு செல்கிறோம்.

 சராசரியாக ஒரு புடவைக்கு ரூ.12 முதல் ரூ.16 வரை தேய்ப்புக்கூலியாக வாங்குகிறோம். இதில் சுங்குடி புடவைகளை தேய்ப்பவர்களுக்கு கூலியாக புடவை ஒன்றுக்கு ரூ.2.50 முதல் ரூ.3.00 வரை கொடுத்து விடுகிறோம். முன்பு நாள் ஒன்றுக்கு 250 முதல் 350 புடவைகளுக்கு கஞ்சி ஏற்றி கொடுத்து வந்தோம். தற்போது 500 புடவை முதல் 600 புடவைகள் வரை கஞ்சி ஏற்றி விற்பனைக்கு தயார் செய்து கொடுத்து வருகிறோம்’ என்றனர்.

மீண்டும், மீண்டும் வர தூண்டும்

கோடைகாலத்தில் சுங்குடி சேலைகளை அதிகளவில் உற்பத்தி செய்ய முடியும். அதனால்தான் தற்போது சின்னாளபட்டி முழுவதும் சுங்குடி சேலைகளுக்கு ஜவ்வரிசி மூலம் தயாரிக்கப்படும் கஞ்சியில் நனைத்து அதிகளவில் உலர வைத்து வருகின்றனர். இங்கு தயாராகும் சுங்குடி சேலைகள் ரகம், கலர், தரத்தை பொறுத்து ரூ.150 முதல் ரூ.700 வரையிலும் உயர் ரகமாக தயாரிக்கப்படும் சுங்குடி புடவைகள் அவற்றின் ஜரிகைகளை பொறுத்து ரூ.900 வரை விற்பனை செய்யப்படுகிறது. ஒருமுறை சுங்குடி நகரமான சின்னாளபட்டிக்கு வந்து சுங்குடி புடவைகள் எடுத்தவர்கள் வாடிக்கையாளர்களாக மாறி தொடர்ந்து இங்கு வந்து புடவைகள் எடுத்து செல்கின்றனர்.

திணறும் வாடிக்கையாளர்கள்

சுங்குடி உற்பத்தியாளர்களுக்கிடையே டிசைன்களை உருவாக்குவதில் போட்டி ஏற்பட்டு கொண்டு ரகசியமாக தினசரி நூற்றுக்கணக்கான டிசைன்களை உருவாக்கி வருகின்றனர். இவ்வாறு புதிய டிசைகளில் தயாரிக்கப்படும் புடவைகளை வாரத்திற்கு ஒருமுறை டிசைன்களை மாற்றி மாற்றி விற்பனை செய்வதால் சுங்குடி புடவைகள் ரகங்களை எடுப்பதில் வாடிக்கையாளர்கள் திணறி விடுகின்றனர்.

Tags : Summer Weil , sungudi saree,hot summer,sempatty
× RELATED கோடை வெயில் எதிரொலி சாத்தனூர் அணைக்கு...