×

மஞ்சூர் அருகே வழிகாட்டி பலகை இல்லாததால் சுற்றுலா பயணிகள் அவதி

மஞ்சூர் :பெயர் பலகை இல்லாததால் ஊட்டி, குன்னூர் செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் தற்போது கோடை சீசன் களை கட்டியுள்ளது. பள்ளி, கல்லூரிகள் விடுமுறை மற்றும் சமவெளி பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர் நீலகிரி மாவட்டத்திற்கு வந்து செல்கின்றனர். இதனால் சமவெளி பகுதிகளில் இருந்து ஊட்டிக்கு வரும் சுற்றுலா வாகனங்களால் பர்லியார் - குன்னூர் சாலை மற்றும் குஞ்சபனை, கோத்தகிரி சாலைகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இது தவிர காரமடையில் இருந்து வெள்ளியங்காடு, கெத்தை, மஞ்சூர் வழியாகவும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் வாகனங்களில் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிக்கு சென்று வருகின்றனர்.   மேலும் சுற்றுலா பயணிகள் காரமடையில் இருந்து மஞ்சூர் மின்வாரிய மேல்முகாம் வரை எந்த சிரமமும் இல்லாமல் பயணிக்கும் நிலையில் ஊட்டி, மஞ்சூர் -கோவை பிரிவு பகுதியான மேல் முகாம் பகுதியில் ஊட்டி மற்றும் மஞ்சூர் செல்லும் வழி குறித்த பெயர் பலகை வைக்கவில்லை.

இதனால் அந்த வழியாக செல்லும் பயணிகள் பெரும்பாலானோர் திண்டாடுவதுடன் மஞ்சூர் சென்று ஊட்டி மற்றும் குன்னூர் செல்லும் வழி குறித்து பிறரிடம் விசாரித்து திரும்பி செல்ல வேண்டியுள்ளது.  எனவே சுற்றுலா பயணிகள் நலன் கருதி மின்வாரிய மேல் முகாம் பகுதியில் ஊட்டி மற்றும் குன்னூர் பகுதிகளுக்கு செல்லும் வழிகாட்டி பலகையை வைக்க நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.


Tags : Manjur , Tourists ,lack of guide, board, manjur , ooty
× RELATED கொடைக்கானல் மஞ்சூர் வனப்பகுதியில்...