கோவையில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து: 60 அடி பள்ளத்தில் லாரிகள் உருண்டு விழுந்ததில் ஒருவர் பலி

கோவை: கோவை இருகூர் ரயில்வே மேம்பாலத்தில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி 60 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இருகூர் ரயில்வே மேம்பாலம் சேலம்-சென்னை புறவழிசாலையில் அமைத்துள்ளது. இந்த சாலையில் கேரளாவுக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் மற்றும் சென்னைக்கு செல்லக்கூடிய கனரக வாகனங்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை பெங்களுருவில் இருந்து கோவைக்கு பழங்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. பழங்களை ஏற்றி சென்ற லாரி ஓட்டுநர் பெயர் ராகவேந்திரா, அவருக்கு வயது 24. அதேபோல கேரளா மாநிலத்தில் இருந்து வீட்டு உபயோக பொருட்களை ஏற்றி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த இரு லாரிகளும் சேலம் ரயில்வே மேம்பாலத்தில் அதிவேகமாக வந்துகொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

மேலும் இந்த பாலம் மிகவும் குறுகலாக இருந்ததால் லாரிகள் இரண்டும் நேருக்குநேர் மோதியது. நேருக்கு நேர் மோதியதில் இரண்டு லாரிகளும் 60 அடி பள்ளத்தில் உருண்டு கீழே விழுந்தது. இந்த விபத்தில் கேரளா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  மற்றொரு லாரி ஓட்டுநர் படுகாயங்களோடு உயிர் தப்பியுள்ளார். இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். உயிரிழந்த லாரி ஓட்டுனரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இரண்டு லாரிகளும் பள்ளத்தில் உருண்டு விழுந்ததில் லாரியில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த விபத்துக்கான காரணங்கள் குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED தனியார் தண்ணீர் லாரிகள் நியாயமான...