×

ரூ.10 கோடியை திருப்பி தரக்கோரிய கார்த்தி சிதம்பரம் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது : உச்சநீதிமன்றம்

புதுடெல்லி : நீதிமன்றத்தில் செலுத்திய ரூ.10 கோடியை திருப்பி தரக்கோரிய கார்த்தி சிதம்பரம் மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.  கடந்த 2007ம் ஆண்டில் ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதியுதவி பெறுவதற்காக வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் கீழ் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரில் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்தி சிதம்பரம், ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்தின் இயக்குநர்கள் பீட்டர் முகர்ஜி, இந்திராணி முகர்ஜி உள்ளிட்டோருக்கு எதிராக முதலில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.

அந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அமலாக்கத்துறையினரும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம் மே மற்றும் ஜூன் ஆகிய மாதங்களில் அமெரிக்கா, ஸ்பெயின், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கு பயணம் செய்ய இருப்பதாகவும் இதற்காக அனுமதி வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், கார்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டார். மேலும் வைப்புத்தொகையாக ரூ.10 கோடி செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டது. இந்நிலையில், உச்சநீதிமன்ற நிபந்தனையின்படி பதிவாளரிடம் ஏற்கனவே ரூ.10 கோடி கார்த்தி சிதம்பரம் கட்டியுள்ளார். நீதிமன்றத்தில் ஏற்கனவே கட்டிய பணத்தை தந்தால்தான் புதிதாக பயணம் செல்ல பணம் செலுத்த முடியும் என மனு கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் கார்த்தி சிதம்பரம் மனு மீது உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது என நீதிபதி திட்டவட்டமாக கூறியுள்ளார்.


Tags : Karthi Chidambaram ,Supreme Court , Karthi Chidambaram, Supreme Court, INX Media Case
× RELATED மகளிர் உரிமைத் தொகையை பிச்சை என்று...