×

நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை சி.இ.ஓ. திடீர் ராஜினாமா!

மும்பை: ஜெட் ஏர்வேஸ் துணை தலைமை நிர்வாக அதிகாரி அமித் அகர்வால் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். விமான போக்குவரத்து துறையில் தனியார் நிறுவனங்கள் குதித்த பின்னர் போட்டி மனப்பான்மையில் பயணிகளுக்கு ஆதரவாக சில நிறுவனங்கள் கட்டணங்களை குறைத்தும், சிறப்பு சலுகைகளை அறிவித்தும் வாடிக்கையாளர்களை முன்னர் கவர்ந்திழுத்தன. இந்த தொழில் போட்டியில் கிங் பிஷர் உள்ளிட்ட சில நிறுவனங்கள் கடுமையான இழப்பை சந்தித்தன. அவ்வகையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அதை ஒட்டி நிறுவனம் தனது சேவைகளை குறைத்தது. அந்நிறுவன விமானிகள் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான மாத சம்பளத்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து வழங்காமல் இழுத்தடித்து வருகிறது.

இதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், தினசரி நிர்வாக செலவுகளுக்கும் பணம் இல்லாத நிலை ஏற்பட்டதால் கடந்த மாதம் 17ம் தேதி முதல் தனது சேவைகள் அனைத்தையும் ஜெட் ஏர்வேஸ் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணை தலைமை நிர்வாக அதிகாரியும், தலைமை நிதி அதிகாரியுமான அமித் அகர்வால் தனது பதவியை இன்று ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது சொந்த காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்ததாக தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு டிசம்பர் முதல் அமித் அகர்வால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் பட்டய கணக்காளர் மற்றும் துணை தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.


Tags : Jet Airways ,CEO ,resignation ,crisis , The financial crisis, Jet Airways, Deputy CEO, resigned
× RELATED இந்தியாவில் தற்போதைக்கு டெஸ்லா...