×

சர்ச்சை பேச்சு எதிரொலி ஒட்டப்பிடாரத்தில் பிரச்சாரத்தை ரத்து செய்தார் கமல்

தூத்துக்குடி: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று ஒட்டப்பிடாரத்தில் மேற்கொள்ளவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள 4 தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் தற்போது உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று முன்தினம் அரவக்குறிச்சியில் பிரச்சாரத்தின் போது பேசிய கமல், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்து எனவும் அவரது பெயர் நாதுராம் கோட்சே என்றும் கூறினார். கமலின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. இதன் எதிரொலியாக அரவக்குறிச்சியில் கமல் நேற்று பங்கேற்க இருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் இன்று ஒட்டப்பிடாரத்தில் கமல் பங்கேற்க இருந்த பிரச்சாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் நாளை திருப்பரங்குன்றத்தில் திட்டமிட்டபடி கமல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திருப்பரங்குன்றம் தோப்பூரில் நாளை மாலை 4 மணிக்கு கமல்ஹாசன் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதனையடுத்து பெரியார் நகர், பனையூர், அனுப்பானடி, வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் கமல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இதன்பின்னர் இரவு 8 மணியளவில் திருப்பரங்குன்றத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கமல் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கமல் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை அலுவலகம் மற்றும் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்து அமைப்பினரை சேர்ந்தவர்கள் அவரது அலுவலகத்திற்கு முன் போராட்டம் நடத்த உள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Kamal , Polling, election campaign, people's justice, ottapidaram
× RELATED பத்து வருஷத்துல ஒன்னும் நடக்கல…...