×

வாட்சன் காலில் ரத்தக்கறை...... ஐபிஎல் பைனலில் நடந்தது என்ன?: உண்மையை போட்டுடைத்த ஹர்பஜன்

ஐதராபாத்: நடந்து முடிந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணியின் ஷேன் வாட்சன் காலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாமல் ரத்தம் சொட்ட சொட்ட விளையாடியதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐதராபாத்தில் நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சென்னை-மும்பை அணிகள் மோதின. இப்போட்டியில் சென்னை அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி 4-வது முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியது. சென்னை அணி இத்தொடரில் 4-வது முறையாக மும்பை அணியிடம் தோல்வியடைந்தது. இப்போட்டியில் சென்னை அணியை வெற்றிபெறச் செய்ய வாட்சன் கடுமையாக போராடினார். வாட்சன் அதிரடியாக ஆடி 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தும் சென்னை அணி தோல்வியை தழுவியது.

வாட்சன் காலில் 6 தையல்

இந்நிலையில் வாட்சன் குறித்து சென்னை அணியின் முன்னணி சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் வாட்சன் காலில் ரத்தம் சொட்ட சொட்ட ஆடியது தெரியவந்தது. மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது: ஐபிஎல் பைனலில் வாட்சன் பீல்டிங் செய்யும்போது காலில் காயம் ஏற்பட்டது. இருப்பினும் காயம் ஏற்பட்டதை யாரிடமும் தெரிவிக்காமல் அவர் பேட்டிங் செய்தார். போட்டி முடிந்த பின்னர் வாட்சன் காலில் 6 தையல்கள் போடப்பட்டதாக அவர் கூறினார்.

ஆட்டத்தின் போக்கை மாற்றிய தோனியின் ரன் அவுட்

பைனலில் சென்னை அணி 150 ரன் என்ற எளிய இலக்கை எட்டமுடியாமல் தோல்வியடைந்ததற்கு பார்ட்னர்ஷிப் இல்லாததே காரணம் என ஹர்பஜன் கூறினார். டுப்லெஸிஸ்-வாட்சன் ஜோடியை தவிர வேறு யாரும் பொறுப்பாக விளையாடவில்லை. சீரான இடைவேளையில் விக்கெட்டுகள் வீழ்ந்தது பெரிய பின்னடைவாக அமைந்தது. தோனியின் ரன் அவுட் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. அது மிகவும் கடினமான முடிவுதான். இருப்பினும் இத்தகைய குழப்பமான சூழலில் முடிவு பேட்ஸ்மேனுக்கு சாதகமாகத்தான் கொடுக்கப்படும். நடுவரின் இந்த முடிவு எங்களுக்கு அதிர்ச்சியளித்தது. இருப்பினும் அதிரடியாக விளையாடிய வாட்சன் அணியை வெற்றியடைய செய்துவிடுவார் என நினைத்தேன். இருப்பினும் தோல்வியடைந்து விட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.


Tags : Watson ,final ,Harbhajan ,IPL , Harbhajan Singh, Shane Watson, IPL 2019 final
× RELATED மகளிர் பிரீமியர் இறுதி போட்டிக்கு...