×

தங்கள் பெயரில் 88 கோடி மோசடி செய்த தனியார் ஆலை அதிபரை கைது செய்யக்கோரி தர்ணா: கடலூர் எஸ்.பி. ஆபீசில் விவசாயிகள் கதறல்

கடலூர்: தங்கள் பெயரில் கடன் வாங்கி ₹88 கோடி மோசடி செய்த தனியார் சர்க்கரை ஆலை அதிபரை கைது செய்ய வலியுறுத்தி கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.கடலூர் மாவட்டம் பெண்ணாடத்தில் அம்பிகா, ஏ.சித்தூரில் திருஆரூரான் ஆகிய சர்க்கரை ஆலைகளை சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ராம்.வி.தியாகராஜன் நடத்தி வருகிறார். இவர், கடலூர் மாவட்டத்தில் 11,523 விவசாயிகளிடம் கடந்த 2016-17, 2017-18ல் கரும்பு கொள்முதல் செய்த பணம் வழங்கவில்லை. இதற்காக, விவசாயிகள் பெயரில் அவர்களுக்கு தெரியாமலேயே வங்கியில் கடன் பெற்று ₹88.51 கோடி மோசடியில் ஈடுபட்ட புகாரின் பேரில் கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்.வி.தியாகராஜனை சென்னையிலிருந்து கடலூருக்கு அழைத்து வந்து கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தினர். விவசாயிகள் பெயரில் வங்கியில் பெற்ற கடனை திரும்பச் செலுத்துவதற்கு கால அவகாசம் கேட்டதால் விசாரணைக்குப் பின்னர் அவர் திருப்பி அனுப்பப்பட்டார். இருப்பினும் இந்த மோசடியில் வங்கி அதிகாரிகளுக்கான தொடர்புகள் குறித்து விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலர் ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாதவன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரிடமும் மாவட்ட எஸ்.பி யிடமும் சர்க்கரை ஆலை விவகாரம் தொடர்பாக மனு அளித்தனர்.சர்க்கரை ஆலை அதிபரை கைது செய்து, அவரது சொத்துக்களை ஜப்தி செய்து விவசாயிகள் பெயரில் வங்கியில் பெற்ற கடனை திரும்ப அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிற ஜூன் 2ம் தேதி கடலூரில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படுமெனவும் அறிவித்துள்ளனர்.  இதனிடையே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் கடலூர் எஸ்.பி. அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர். 5,873 விவசாயிகளிடம் ₹88.51 கோடி மோசடியில் ஈடுபட்ட வங்கி அதிகாரி மற்றும் தனியார் சர்க்கரை ஆலை அதிபர் தியாகராஜன், கரும்பு ஆலை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய வேண்டும், 14 லட்சம் டன் கரும்பு நிலுவைத்தொகையை வழங்காத சர்க்கரை ஆலைகளிடம் இருந்து பாக்கி தொகையை விவசாயிகளுக்கு பெற்றுத்தர வேண்டும் என்று கூறி தர்ணா போராட்டத்த்ில் ஈடுபட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை மாவட்ட எஸ்.பி சரவணனிடம் வழங்கினர். பின்னர் அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளை நேரில் சந்தித்து கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அப்போது விவசாயிகள் தங்கள் ெபயரில் கடன் வாங்கி மோசடி செய்துள்ளதாக கூறி கதறி அழுதனர். பின்னர் எஸ்.பியின் உறுதியை ஏற்று கலைந்து சென்றனர்.

Tags : Cuddalore SB ,Darnah ,factory ,Peasants , 88 crore, their , private ,factory, chief Dharna
× RELATED 97 பேர் பங்கேற்பு பெரம்பலூர் அருகே...