ஜப்பான் தொழில்நுட்பத்தில் மழை நீரை சேகரித்து விநியோகிக்க புது திட்டம்

* தமிழகம் முழுவதும் செயல்படுத்த முடிவு
* ஆய்வு செய்யும் பணியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள்

சென்னை: மழை நீரை சேகரித்து குடிநீருக்கு பயன்படுத்தும் வகையில் ஜப்பான் தொழில்நுட்பத்தில் புதிய திட்டம் ஒன்றை தமிழகம் முழுவதும் செயல்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவழை பொய்த்ததால் அணைகள், ஏரிகள் வறண்டு வருகிறது. இதனால், நிலத்தடி நீரை குடிநீர் மற்றும் இதர தேவைக்கு பயன்படுத்தலாம் என்றால் கூட நிலத்தடி நீர் மட்டம் அதளபாதாளத்திற்கு சென்று விட்டது. இதனால்,  தண்ணீர் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில், மீண்டும் மழை சேகரிப்பு என்ற திட்டத்தை தமிழக அரசு கையில் எடுத்துள்ளது. முதற்கட்டமாக, மழைநீரை சேமிக்கும் வகையில் தரமணியில் உள்ள பொதுப்பணித்துறை வளாகத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. அங்கு, 6 லட்சம் லிட்டர் தண்ணீரை சேமிக்கும் வகையில் ரூ.1.6 கோடி செலவில் மழை நீரை சேகரிக்க ஜப்பான் தொழில்நுட்பத்தில் பிரமாண்ட கீழ்நிலைத்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மழை நீர் சேகரிப்பு கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் சேமிக்கப்பட்டு, அந்த வளாகத்தில் உள்ள அலுவலகங்களில் தண்ணீர் விநியோகிக்கப்படுகிறது. இந்த ெதாழில்நுட்பத்தை பயன்படுத்தி அடுத்தக்கட்டமாக தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டப்பகுதிகளில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது. இது தொடர்பாக ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. அதன்பிறகு ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகமை நிதியை பெற்றோ அல்லது தமிழக அரசு நிதி பெற்றோ செயல்படுத்தப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Japan , Japan technology, New plan, collect ,rain water
× RELATED டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ்...