வாட்ஸ்அப் தகவலால் களைகட்டியது ஊர் திருவிழா நாட்டாமை கிடச்சுட்டாரு பந்தக்கால நடுங்கப்பா : தந்தை கிடைத்த சந்தோஷத்தில் ஸ்வீட் கொடுத்து கொண்டாடிய மகன்

சென்னை: நாட்டாமை திடீரென காணாமல் போனதால் ஊர் திருவிழாவையே ஒரு கிராமம் நிறுத்திவைத்திருந்தது. ஆனால் போலீசாரின் வாட்ஸ் அப் தகவல் வைரலாக பரவியது. அதில் காணாமல் போன நாட்டாண்மையின் மகனுக்கும் அந்த வாட்ஸ் அப் வீடியோ வந்தது. இதை பார்த்த அவர் காவல் நிலையத்துக்கு சென்று தந்தையை மீட்டு வந்தார். இதனால் ஊர் திருவிழாவுக்கான வேலைகள் களைகட்ட ெதாடங்கி உள்ளது.செங்கல்பட்டு அடுத்த பட்டரைவாக்கம் கிராமத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் மயங்கிக்கிடப்பதாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில் இருந்து தமிழ்வாணன் மற்றும் போலீசர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். மயக்க நிலையில் இருந்த முதியவரை தண்ணீர் தெளித்து எழுப்பினர். அவருக்கு தண்ணீர் மற்றும் உணவு கொடுத்து அவரை இயல்பு நிலைக்கு கொண்டு வந்தனர்.  

விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் செஞ்சி தாலுகாவுக்கு உட்பட்ட மேல்கூடலூர் கிராமத்தை சேர்ந்த வெங்கட் ராமன் என்பது தெரியவந்தது. இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சுயநினைவு இல்லாமல் வழிதவறி வந்துவிட்டதாக கூறினார். இது சம்மந்தமாக வாட்ஸ் அப்பில் தகவல் கொடுத்தனர். அந்த வாட்ஸ் அப் வீடியோ வைரலாக பரவியது.சென்னை திருவான்மியூரில் பூக்கடை வைத்துள்ள அவரது மகன் ரங்கன் வாட்ஸ் அப்பை பார்த்துவிட்டு செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்துக்கு விரைந்து வந்தார். ஏற்கனவே காணாமல் போனதாக செஞ்சி அடுத்த பெரிய தச்சூர் காவல் நிலையத்தில் அவரது மகள் குமாரி புகார் கொடுத்திருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவுசெய்து தேடிவந்த நிலையில் அவரது மகனிடம் தந்தையை ஒப்படைத்தார். மேலும் போலீசாருக்கு அவர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். மேல்கூடலூரில் வெங்கட்ராமன் நாட்டாமையாக இருந்தார். அவர் காணாமல் போனதால் ஊரில் திருவிழா நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது அவர் கிடைத்ததையடுத்து ஊர்திருவிழா சிறப்பாக நடைபெறும் என்று அவரது மகன் ரங்கன் கூறினார். மேலும் தந்தை கிடைத்த மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் செங்கல்பட்டு தாலுகா போலீஸ் நிலைய காவலர்களுக்கு ஸ்வீட் வாங்கிக்கொடுத்துள்ளார். 


× RELATED சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலைய...