×

செயல் அலுவலர், பணியாளர் மீது கொலை வெறி தாக்குதல் அறநிலையத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்: நடவடிக்கை எடுக்கக்கோரி ஆணையரிடம் புகார்

சென்னை: கோயில் நிலத்தை மீட்க முயற்சி செய்த கோயில் செயல் அலுவலர், பணியாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை ஊழியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கட்டிடம் கட்ட முயன்றவர்கள் மீது செயல் அலுவலர் சீனிவாசன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் ஞாயிறு கிராமம் அருகே புஷ்பரதீஸ்வரர் கோயில் பணிகளை முடித்து மாலை 3 மணி அளவில் செயல் அலுவலர் சீனிவாசன், கோயில் பணியாளர் தனஞ்செயன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் சிலர் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் கொலை செய்யும் நோக்கில் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். அப்போது, ‘எங்கள் மீதே போலீசில் புகார் கொடுப்பீங்களா?’ என்று மிரட்டியுள்னர். இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துமவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் நேற்று அறநிலையத்துறை ஊழியர்கள் மண்டல இணை ஆணையர் அலுவலகம் மற்றும் கோயில்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். சென்னை நுங்கம்பாக்கம் ஆணையர் அலுவலகம் முன்பு கூட்டமைப்பு மாநில தலைவர் சீதரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்ட அறநிலையத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.இந்நிலையில், தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சீதரன் நேற்று காலை துறையின் ஆணையர் பணீந்தர்ரெட்டியை சந்தித்து மனு ஒன்றை அளித்தார்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘செயல் அலுவலர் மற்றும் கோயில் பணியாளர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் செயல் அலுவலர் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு பணிப்பாதுகாப்பு அளிக்க வேண்டும். கோயில் செயல் அலுவலர்கள், ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் அளிக்கும் போது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் துறை தலைவருக்கு பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்கிறோம்’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Executive Officer ,Murder Attack ,Staff Staff Demonstrators ,Commissioner , Executive Officer, Murder Attack, Complaint ,Commissioner,Action
× RELATED குவார்டருக்காக கொலை வெறி தாக்குதல்...