×

இந்தியா வாங்கினால் எப்-21 போர் விமானங்கள் வேறு நாடுகளுக்கு விற்கப்படாது: அமெரிக்க நிறுவனம் உறுதி

புதுடெல்லி: ‘‘இந்திய விமானப்படை 114, எப்-21 போர் விமானங்களை வாங்கினால், அவற்றை வேறு நாடுகளுக்கு விற்கமாட்டோம்’’ என அமெரிக்காவின் லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை ரூ.1 லட்சத்து 24 ஆயிரம் கோடி மதிப்பில் வாங்குவதற்கான ஆரம்ப கட்ட டெண்டர் கடந்த மாதம் விடுக்கப்பட்டது. இது சமீப காலங்களில் மேற்கொள்ளப்படும் உலகின் மிகப்பெரிய ராணுவ கொள்முதல். இந்த ஆர்டரை பெறுவதற்கான போட்டியில், எப்-21 போர் விமானங்களை தயாரிக்கும் அமெரிக்காவின் லாக்ஹீட் மார்்டின், எப்/ஏ-18 ரக விமானங்களை தயாரிக்கும் போயிங், டைபூன் ரக விமானத்தை ஐரோப்பிய நிறுவனம், மிக்-35 ரக விமானங்களை தயாரிக்கும் ரஷ்ய நிறுவனம், கிரிபென் ரக விமானத்தை தயாரிக்கும் சாப்ஸ் நிறுவனம் ஆகியவை இறங்கியுள்ளன. பாலகோட் தாக்குதலையடுத்து, இந்த ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய விமானப்படை வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் எப்-21 ரக போர் விமானத்தை தயாரிக்கும் லாக்‌ஹீட் மார்ட்டின் நிறுவனத்தின் வர்த்தக பிரிவு துணைத் தலைவர் விவேக் லால் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:இந்திய விமானப்படைக்கு 114 போர் விமானங்களை சப்ளை செய்யும் ஒப்பந்தத்தை பெற்றால், இந்த ரக போர் விமானம் வேறு எந்த நாடுகளுக்கும் விற்பனை செய்யப்படாது.

இந்தியாவில் உள்ள 60 விமானப்படை தளங்களில் பயன்படுத்தும் அளவுக்கு எப்-21 விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றின் இன்ஜின் மேட்ரிக்ஸ், எலக்ட்ரானிக் போர் கருவிகள் மிகச் சிறந்தவை. மற்ற விமானங்களைவிட் எப்-21 விமானத்தில் 40 சதவீதம் கூடுதலாக ஆயுதங்கள் எடுத்துச் செல்லலாம். இந்திய விமானப்படையின் தேவையை இந்த போர் விமானம் நிறைவேற்றும். இந்த ஒப்பந்தத்தை பெற்றால், டாடா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் மிகச் சிறந்த விமான உற்பத்தி ஆலையை தொடங்குவோம். அதோடு 165 மில்லியன் டாலர் மதிப்பிலான சர்வதேச போர் விமான தயாரிப்பு சூழல் அமைப்பில் இந்தியாவும் இணைக்கப்படும். எப்-16 போர் விமானத்துக்கும் எப்-21 போர் விமானத்துக்கும் பல வேறுபாடுகள் உள்ளன. உதாரணத்துக்கு இதன் பறக்கும் ஆயுள் காலம் 12 ஆயிரம் மணி நேரம். இது எப்-16 விமானத்தில் 8 ஆயிரம் மணி நேரம். இதில் உள்ள எலக்ட்ரானிக் போர் கருவிகள் இந்தியாவுக்காக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்களில் வழக்கமான பெட்ரோட் நிரப்பும் வசதியுடன், டியூப் மூலம் பெட்ரோல் நிரப்பப்படும் வசதியும் உள்ளது. இந்த இரண்டுவிதமான வசதிகள் உள்ள ஒரே போர் விமானம் எப்-21 தான். இதில் உள்ள நவீன காக்பிட் மற்றும் சிறப்பு தகவல் கருவிகளை, நாங்கள் வேறு எந்த நாட்டுக்கும் வழங்கவில்லை. அச்சுறுத்தல்களை துல்லியமாக கண்டறியும், நெடுந்தூர அகச்சிவப்பு தேடுதல் மற்றும் கண்டுபிடிப்பு கருவிகள், 3 ஏவுகணைகளை ஏவும் அடாப்டர் வசதிகள் இதில் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : India ,company ,US ,countries , India buys, F-21 fighter ,jets , US
× RELATED இஸ்ரேலுக்கான விமான சேவை தற்காலிகமாக...