வைகாசி மாத பூஜைகளுக்காக இன்று நடை திறப்பு சபரிமலையில் இந்து அமைப்பினர் திரள்வதால் பரபரப்பு: பாதுகாப்பை பலப்படுத்த கேரள அரசு முடிவு

திருவனந்தபுரம்: சபரிமலையில் மீண்டும் இளம்பெண்கள் தரிசனத்திற்கு வரலாம் என்று தகவல் பரவியதை தொடர்ந்து பல்வேறு இந்து அமைப்பினர் சபரிமலையில் திரள்வதால் மீண்டும் பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.சபரிமலையில் அனைத்து வயது இளம்பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இளம்பெண்கள் தரிசனம் செய்ய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டுமென கேரள முதல்வர் பினராய் விஜயன் அறிவித்தார். ஆனால் அதற்கு பாஜ, ஆர்எஸ்எஸ், இந்து ஐக்கிய வேதி, சபரிமலை கர்ம சமிதி உள்பட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனால் இந்து அமைப்புகளின் எதிர்ப்பை மீறி போலீசார் இளம்பெண்களை சபரிமலைக்கு அழைத்து சென்றனர். இதையடுத்து கேரளா முழுவதும் வன்முறை வெடித்தது.

இந்நிலையில், மக்களவை தேர்தலை முன்னிட்டு கடந்த 2 மாதங்களாக சபரிமலை விவகாரத்தில் கேரள அரசு தீவிரம் காட்டவில்லை. சபரிமலையில் தரிசனத்திற்கு வந்த இளம்ெபண்களை போலீசார் நிலக்கல்லில் இருந்து தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் கடந்த 2 மாதமாக சபரிமலையில் எந்த பிரச்னையும் ஏற்படாமல் இருந்தது.இந்நிலையில் வைகாசி மாத பூஜைக்காக கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. வரும் 19ம் தேதி வரை நடை திறந்திருக்கும்.கேரளாவில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்து விட்டதால் சபரிமலை விவகாரத்தில் மீண்டும் அதிரடி நடவடிக்கையை கையாள கேரள அரசு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் ெவளியாகி உள்ளது. சபரிமலையில் தரிசனத்திற்கு இளம்பெண்கள் வந்தால் அவர்களை பாதுகாப்புடன் அழைத்து செல்ல போலீசார் தீர்மானித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் வெளியாகி உள்ளதை தொடர்ந்து தரிசனத்திற்கு வரும் இளம்பெண்களை தடுக்க ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிஷத், சபரிமலை கர்ம சமீதி உள்பட இந்து அமைப்பினர் இன்று முதல் சமரிமலையில் முகாமிட தீர்மானித்துள்ளனர். இதனால் சபரிமலையில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதையடுத்து கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மாநில அரசு தீர்மானித்துள்ளது.

Tags : government ,Kerala ,organizations ,Sabarimala , Walking ,monthly, pooja, Sabarimala, security
× RELATED கேரள அரசு லாட்டரியில் கூலி...