×

ஒடிசாவில் சட்டப்பேரவை தேர்தலால் மக்களவை தேர்தல் முடிவுகள் தாமதமாகும்

புவனேஸ்வர்: ஒடிசாவில் மக்களவைத் தேர்தல் வாக்குகளுடன் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குகளும் சேர்த்து எண்ணப்பட இருப்பதால், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்படும் என்று அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.ஒடிசாவில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளுக்கும் 147 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் சேர்த்து கடந்த ஏப்ரல் 11, 19, 23 மற்றும் 29 ஆகிய தேதிகளில் 4 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான அறையில் வைக்கப்பட்டுள்ளன. மே 23ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுக்கான பயிற்சி நிகழ்ச்சியில் அம்மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி சுரேந்திர குமார் பேசியதாவது:ஒடிசாவில் சட்டப்பேரவை, மக்களவை தேர்தலுக்கான வாக்குகள் ஒரே சமயத்தில் எண்ணப்படுவதால் மக்களவை தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட கூடும்.

நாடு முழுவதும் ஒவ்வொரு மக்களவைத் தொகுதியின் வாக்குகள் 14 டேபிள்களில் எண்ணப்படும். ஆனால் ஒடிசாவில் மக்களவைத் தொகுதி வாக்குகள் 7 டேபிள்களில் மட்டுமே எண்ணப்பட உள்ளது. அதேபோல சட்டப்பேரவை வாக்குகளும் 7 டேபிள்களில் மட்டுமே எண்ணப்படுகிறது. இதனால் தேர்தல் முடிவுகளை அறிவிக்க கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, ஒவ்வொரு தொகுதியிலும் 5 வாக்குப்பதிவு இயந்திரங்களின் ஒப்புகை சீட்டு சரி பார்க்கப்பட வேண்டுமென்பதால், முதல் முறையாக அது செயல்படுத்தப்பட உள்ளது. இது போன்று எண்ணுவதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களாகும். ஒப்புகை சீட்டு குலுக்கல் முறையில் வெளிப்படைத்தன்மையுடன் தேர்ந்தெடுக்கப்படும். மாநிலத்தில் வெயில் அதிகமாக இருப்பதால் அனைத்து வாக்கு எண்ணும் மையங்களும் குளிரூட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Lok Sabha ,legislature election ,Orissa , Assembly elections , Orissa, Lok Sabha ,election
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...