×

தேர்தல் நேரத்தில் மாற்றம் கோரிய மனு டிஸ்மிஸ் செய்தது உச்ச நீதிமன்றம்

புதுடெல்லி: நாடு முழுவதும், வரும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.கடந்த மாதம் 11ம் தேதி தொடங்கி மொத்தம் ஆறு கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்றுள்ளது. இறுதிக்கட்ட தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் முகமது நிஷான் பாஷா என்பவர் தரப்பில்  ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபக் குப்தா ஆகியோர் அமர்வில் புதிய கோரிக்கை ஒன்றை வைத்தார். அதில், “நாடு முழுவதிலும் எதிர்வரும் அனைத்து தேர்தல்களிலும் வாக்குப்பதிவு தொடங்கும் நேரத்தை காலை 5 மணியாக மாற்றி அமைக்க வேண்டும். ஏனெனில், இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் நோன்பு திறப்பது போன்ற நிகழ்வுகள்  தொடர்பாகவும், நாடு வெப்பநிலை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாலும் நேர மாற்றம் அவசியமாகிறது’’ என கூறியிருந்தார்.

  இதை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உத்தரவிட்டது.இந்த நிலையில் வழக்கு நேற்று மீண்டும், உச்ச நீதிமன்றத்தின் கோடைக்கால விடுமுறை அமர்வு நீதிபதிகள் இந்திரா பானர்ஜி மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “வாக்குப் பதிவு நேரத்தை தேர்தல் ஆணையம் பல்வேறு ஆலோசனைக்கு பிறகு தான் தெளிவாக நடைமுறைப்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் தான் தற்போது வரை விதிமுறைகள்  பின்பற்றப்பட்டு வருகிறது. அதனால் இந்த விவகாரத்தில் எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுவை தள்ளுபடி செய்கிறோம்’’ என்றனர்.

Tags : Supreme Court ,change , Request,election time, Dismissed, Supreme Court
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...