×

பிரதமர் அருகே கணவர்கள் செல்வதை பார்த்தால் பாஜ தலைவர்களின் மனைவிகளுக்கு கிலி: போட்டுத்தாக்கும் மாயாவதி

பிரதமர் மோடியின் அருகே தங்களது கணவர்கள் செல்வதை பார்த்தால் பாஜ தலைவர்களின் மனைவிகள் அச்சமடைகின்றனர் என்று பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தில் தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ‘‘அல்வாரில் தாழ்த்தப்பட்டோர்  சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு மாயாவதி முதலை கண்ணீர்  வடிக்கிறார். உண்மையிலேயே அவருக்கு அக்கறை இருந்தால் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆதரவை திரும்ப பெறவேண்டும்” என்றார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பதிலடி கொடுத்துள்ளார். மாயாவதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜவில் இருக்கும் தலைவர்கள் பிரதமர் மோடியின் அருகில் சென்றால் அவர்களுது மனைவிகள் மிகவும் பயப்படுவதாக எனக்கு தெரியவந்தது. மோடியை போன்று மனைவியை அவர்கள் கைவிட்டுவிடுவார்களோ என அவர்கள்  பயப்படுகின்றனர். இதுபோன்ற சூழல் நிலவுவதால் நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் இதுபோன்ற நபருக்கு வாக்களிக்காதீர்கள். மோடியின் மனைவிக்கு செலுத்தும் உண்மையான மரியாதையாகும்.

அல்வார் கூட்டு பாலியல் பலாத்கார சம்பவம் நடந்தபோது பிரதமர் மவுனமாக இருந்தார். தற்போது இதனை அரசியலாக்க முயற்சிக்கிறார். இது மிகவும் வெட்ககேடானது. தனது சொந்த மனைவியை கைவிட்டவர், எப்படி மற்றவர்களுடைய  சகோதரிகளுக்கும், மனைவிகளுக்கும் மரியாதை தருவார்? கூட்டு பாலியல் சம்பவம் குறித்து நான் எனது கருத்தை வெளிப்படையாக கூறினேன். அதற்கு பின்னர்தான் அரசியல் ஆதாயத்துக்காக மோடி இந்த சம்பவத்தை கையில் எடுத்துள்ளார். கூட்டு பாலியல் பலாத்கார சம்பவத்தை நினைத்து பகுஜன் சமாஜ்  வேதனைப்படுகிறது மற்றும் கவலைப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து சரியான  நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டு வரும்  ஆதரவை திரும்ப  பெறுவேன். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை.
இவ்வாறு அதில் மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.

‘பொதுவாழ்விற்கு தகுதியற்றவர்’: ஜெட்லி விமர்சனம்
மாயாவதியின் விமர்சனம் தொடர்பாக டிவிட்டரில் பதிலளித்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, `‘மாயாவதி பிரதமராக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவரது நிர்வாகம், நெறிகள், பேச்சு அனைத்தும் முன்னெப்போதும்  இல்லாத அளவு தரம் தாழ்ந்து வருகிறது. பிரதமர் மோடியை பற்றி பேசியிருக்கும் விதம் அவர் பொதுவாழ்விற்கு தகுதியற்றவர் என்பதை காட்டுகிறது. தனிப்பட்ட முறையில் அவர் பிரதமர் மோடியை விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சிகள்  அரசியலை மிகவும் கீழ்நிலைக்கு கொண்டு சென்று வருகின்றன’ என பதிவிட்டுள்ளார்.

Tags : husbands ,Kaly ,leaders ,wives ,BJP , husbands , prime minister,BJP leaders, Mayawati
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...