×

சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல்: வளைகுடா பகுதியில் புதிய பதற்றம்

ரியாத்: சவுதி அரேபிய எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த தாக்குதலால் எண்ணெய் கசிவு மற்றும் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சவுதி அரேபிய எரிசக்தி அமைச்சர் காலித் அல்பாலி கூறுகையில், ‘‘சவுதி அரேபியாவின் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஆனால் இதில் யாருக்கும் உயிரிழப்போ, எண்ணெய் கசிவு எதுவும் ஏற்படவில்லை’’ என தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலத்தில்தான் அதன் இரண்டு எண்ணெய் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரேபிய வளைகுடாவை கடக்கும் வழியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதில் ஒரு எண்ணெய் கப்பல், சவுதி எண்ணெய் முனையத்தில் இருந்து அமெரிக்காவுக்கு கச்சா எண்ணெய் எடுத்துச் செல்ல சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கில் ஓமன் குடாவையும், தென்மேற்கில் பாரசீக குடாவையும் கொண்டு அமைந்துள்ள குறுகலான ஜலசந்தியாக ஹோர்முஸ் நீரினை உள்ளது. வளைகுடாவின் எண்ணெய் ஏற்றுமதி கப்பல்கள் பெரும்பாலும் இந்த வழியாகத்தான் செல்கின்றன. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா பொருளாதார தடை விதித்தபோதே, இந்த வழியாக கப்பல்கள் செல்ல அனுமதிக்க கூடாது என ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக, சவூதி அரேபியா, ஈராக், ஐக்கிய அரபு எமிரேட், குவைத், கத்தார் மற்றும் ஈரான் ஆகியவற்றின் பெரும்பாலான எண்ணெய் கப்பல்கள், கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்கின்றன.  இதனால், இந்த வழியாக எண்ணெய் ஏற்றுமதி செய்வது பெரும் அச்சுறுத்தல் நிறைந்ததாக கருதப்படுகிறது. இந்த பாதையை தவிர்த்து செல்லும் ஐக்கிய அரபு எமிரேட்டின் ஒரே முனையமாக  புஜைரா துறைமுகம் உள்ளது.

அதோடு, ஐக்கிய அரபு எமிரேட்டில் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தக்கூடும் என அமெரிக்கா கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், இந்த கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  அமெரிக்கா இப்பகுதியில் ராணுவத்தின் மூலம் பாதுகாப்பை பலப்படுத்தியும் இந்த தாக்குதல் அரங்கேறியுள்ளது. அதேநேரத்தில், ஐக்கிய அரபு நாடுகள் இந்த சம்பவத்துக்காக யாரையும் குற்றம் சாட்டவில்லை.

Tags : Saudi Arabian ,oil ships attack ,area ,Gulf , Saudi Arabia, oil vessel, attack, Gulf area, tension
× RELATED சவூதி அரேபிய சிறையில் இருந்து...