×

திருவொற்றியூர் பக்கிங்காம் கால்வாய் மீது ஆமை வேகத்தில் மேம்பால பணி: விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

திருவொற்றியூர்: திருவொற்றியூர் அருகே பக்கிங்காம் கால்வாய் மீது மேம்பால பணிகள் மந்தகதியில் நடைபெறுவதால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதிக்குள்ளாகின்றனர். திருவொற்றியூரில் இருந்து பேசின் சாலை வழியாக எம்.ஜி.ஆர் நகரை கடந்து மணலி, மாதவரம் மற்றும் மீஞ்சூர் ஆகிய பகுதிகளுக்கு மாநகர பேருந்து, லாரி, கார், ஆட்டோ, பைக் என தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.

இந்த வாகனங்கள் மணலி சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாய் மேம்பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும். பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் தற்போது வலுவிழந்து காணப்படுகிறது. இதனால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து, இந்த கால்வாய் மீது ரூ.42 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்ட நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டது. இதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.

அதன்படி 530 மீட்டர் நீளம் கொண்ட பாலப்பணி நடைபெற்று வருகிறது. ஆனால், பணிகள் மந்த கதியில் நடைபெறுவதால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும், இந்த மேம்பால கட்டுமான பணி முடிவடையும் வரையில் வாகனங்கள் எளிதாக செல்ல தற்காலிக சாலை அமைத்து இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததால், குண்டும், குழியுமான சாலையில் வாகனங்கள் செல்லும் நிலை உள்ளது. இதனால், நிலை தடுமாறி அருகிலுள்ள கால்வாயில் விழும் அபாயம் உள்ளது.

வாகனங்கள் ஊர்ந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பலர் சாலை பள்ளத்தில் தடுமாறி விழுந்து காயமடைந்து செல்கின்றனர்.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறுகையில், ‘‘இந்த மேம்பால பணியானது 2018 டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட்டிருக்க வேண்டும்.

ஆனால் அதிகாரிகள் மெத்தனம் காரணமாக தற்போது 60 சதவீதம் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது. மேலும் இந்த மேம்பால பணிக்காக இந்த பகுதியில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்விளக்குகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லக்கூடிய வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகிறது.

எனவே இந்த மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும். அதுவரை வாகனங்கள் எளிதாக செல்ல தற்காலிக சாலை அமைக்க வேண்டும்,’’ என்றனர். மேம்பால பணி2018 டிசம்பர் மாதம் 31ம் தேதிக்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட்டிருக்க வேண்டும். ஆனால் அதிகாரிகள் மெத்தனம் காரணமாக தற்போது 60 சதவீதம் பணிகள் மட்டுமே முடிவடைந்துள்ளது.

Tags : Travancore ,Buckingham Canal ,motorists , Buckingham canal, turtle speed, speed work, crash, motorists
× RELATED வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீர்...