×

நள்ளிரவில் 6 மணி நேரம் தொடர் மின்தடை மின்வாரிய அலுவலகத்தை மக்கள் முற்றுகை: திருவொற்றியூரில் பரபரப்பு

திருவொற்றியூர்: வடசென்னை அனல் மின் நிலையம் - எண்ணூர் துணை மின் நிலைய மின் வழித்தடத்தில் உள்ள மின்மாற்றியில் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீரென பழுது ஏற்பட்டதால், எண்ணூர் முதல் திருவொற்றியூர் சுங்கச்சாவடி வரை தொடர்ச்சியாக 6 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதை கண்டித்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  

வடசென்னை பகுதிகளான திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, ராயபுரம், கொருக்குப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், மேற்கண்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக முன் அறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக, தினசரி நள்ளிரவில் நீண்ட நேரம் மின்தடை செய்யப்படுவதால், கடும் புழுக்கத்தால் மக்கள் தூங்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், மின்சாரம் வரும்வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து தெருவில் அமர்ந்து கொள்கின்றனர். இதனால், தூக்கத்தை இழப்பதுடன், கொசுக்கடியில் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு வடசென்னை அனல் மின் நிலையம் - எண்ணூர் துணை மின் நிலைய மின் வழித்தடத்தில் உள்ள மின்மாற்றியில் திடீரென பழுது ஏற்பட்டதால், எண்ணூர் முதல் திருவொற்றியூர் சுங்கச்சாவடி வரை பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
பழுதை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டதால், நீண்ட நேரம் தொடர் மின்தடை ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, ‘‘டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்பட்டுள்ளது. விரைவில் சரி செய்து விடுவோம்,’’ என்று கூறினர். ஆனால், 6 மணி நேரமாகியும் மின்சாரம் வரவில்லை.  

இதனால் ஆத்திரமடைந்த திருவொற்றியூர் பகுதி மக்கள் காலடிப்பேட்டை மின்சார வாரிய அலுவலகத்திற்கு சென்றனர். ஆனால், அங்கு இருந்தவர்கள் முறையான பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவலறிந்து திருவொற்றியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, விரைவில் பழுது சரி செய்யப்பட்டு மின்சாரம் வழங்கப்படும், என தெரிவித்து பொதுமக்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர், பழுது சரி செய்யப்பட்டு காலை 6 மணிக்கு மின்சாரம்  வினியோகிக்கப்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘‘திருவொற்றியூர் மட்டுமன்றி சென்னையில் பல இடங்களில் தொடர்ந்து பல மணி நேரம் மின்சாரம் தடை செய்யப்படுகிறது. இந்த அறிவிக்கப்படாத மின்வெட்டால் நோயாளிகள், முதியவர்கள், குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கோடைகாலம் என்பதால் இரவில் மின்வெட்டு ஏற்படும் போது பலரும் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, மின்வெட்டு பிரச்னைக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

Tags : Siege ,Thiruvottiyur , Midnight, continuous resistance, people's siege, thrills
× RELATED பெண் கட்டட தொழிலாளி கொலை: கொத்தனார் கைது