×

ஒருங்கிணைந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி... ரோகித் ஷர்மா பெருமிதம்

ஐதராபாத்: ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 4வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்ததற்கு வீரர்களின் ஒருங்கிணைந்த முயற்சிதான் காரணம் என்று அந்த அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா கூறியுள்ளார். ராஜிவ் காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 149 ரன் குவித்தது. போலார்டு 41*, டி காக் 29, இஷான் 23, ஹர்திக் 16, ரோகித், சூரியகுமார் தலா 15 ரன் எடுத்தனர். சென்னை அணி பந்துவீச்சில் தீபக் சாஹர் 3, தாகூர், தாஹிர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ரன் எடுத்து 1 ரன் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டது. தொடக்க வீரர்கள் டு பிளெஸ்ஸி 26, வாட்சன் 80 (59 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), பிராவோ 15 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். கேப்டன் டோனி 2 ரன்னில் ரன் அவுட்டானது பெரும் பின்னடைவை கொடுத்தது.

ஒரு கட்டத்தில் மும்பை அணி எளிதாக வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலிங்கா வீசிய 16வது ஓவரில் 20 ரன்னும், குருணல் பாண்டியா வீசிய 18வது ஓவரில் 20 ரன்னும் கிடைக்க, சென்னை அணி வெற்றியை நெருங்கியது. கடைசி ஓவரில் 9 தேவைப்பட்ட நிலையில், மலிங்கா சிறப்பாகப் பந்துவீசி நெருக்கடி கொடுத்தார். அந்த ஓவரின் 4வது பந்தில் வாட்சன் ரன் அவுட்டானார்; கடைசி பந்தில் தாகூர் விக்கெட்டை பறிகொடுக்க சிஎஸ்கேவிடம் இருந்து வெற்றியை பறித்தது மும்பை இந்தியன்ஸ்.

வாட்சன் 31 ரன் எடுத்திருந்தபோது மெக்லநாகன் பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்ட மலிங்கா, பின்னர் தனது 3வது ஓவரில் 20 ரன் வாரி வழங்கினார். மும்பை தோற்றால் அதற்கு முழு காரணம் மலிங்காதான் என்று சமூகவலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்கள் ஓடிக்கொண்டிருந்தபோதே, கடைசி ஓவரை பதற்றமின்றி சிறப்பாக வீசி அனைவரது பாராட்டுகளையும் அள்ளினார்.

இந்த சாதனை வெற்றி குறித்து மும்பை அணி கேப்டன் ரோகித் கூறியதாவது: இந்த தொடரில் நாங்கள் சிறப்பாக விளையாடினோம். லீக் சுற்றின் முடிவில் முதலிடத்தை பிடித்தது திருப்தி அளித்தது. அடுத்து பிளே ஆப் சுற்றிலும் அது தொடர்ந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. களமிறங்கிய 11 வீரர்கள் மட்டுமல்ல... ரிசர்வ் வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவரது பங்களிப்பும் முக்கியத்துவம் வாய்ந்தது.

தொடர் முழுவதுமே எங்களின் பந்துவீச்சு அற்புதமாக இருந்தது. நெருக்கடியான கட்டங்களில் இருந்து மீள்வதற்கு பவுலர்கள் உறுதுணையாக இருந்தனர். மொத்தத்தில், ஒருங்கிணைந்த முயற்சிக்கு கிடைத்த வெற்றி இது. மலிங்கா அவரது 3வது ஓவரை மோசமாக வீசினாலும், நான் நம்பிக்கையை இழக்கவில்லை. அவருக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. முதலில் 20வது ஓவரை ஹர்திக் பாண்டியாவுக்கு கொடுக்கலாம் என்று தான் நினைத்தேன்.

ஆனால், ஏற்கனவே இது போன்ற இக்கட்டான கட்டத்தில் பல முறை சாதித்துக் காட்டியுள்ள மலிங்காவை தேர்வு செய்வது எனக்கு அவ்வளவு சிரமமாக இல்லை. அவரும் அந்த நம்பிக்கையை காப்பாற்றிவிட்டார். ஒரு கேப்டனாக, ஒவ்வொரு போட்டியிலும், தொடரிலும் புதிய பாடங்களை கற்று வருகிறேன். அனைத்து வீரர்களுமே பாராட்டுக்குரியவர்கள். திறமையான அணி தான் சிறந்த கேப்டனை உருவாக்குகிறது. இவ்வாறு ரோகித் கூறினார்.

இன்னும் சிறப்பாக விளையாடி இருக்கலாம்:

இரண்டாவது இடம் பிடித்த சென்னை அணி கேப்டன் டோனி கூறுகையில், ‘இந்த சீசன் எங்களுக்கு நன்றாகவே அமைந்திருந்தது. அதே சமயம், மிகச் சிறப்பான ஆட்டத்தை நாங்கள் வெளிப்படுத்திய சீசன்கள் போல இல்லை என்பதையும் ஒப்புக்கொள்ள வேண்டும். நடுவரிசை போதுமான ஒத்துழைப்பு அளிக்காவிட்டாலும், எப்படியோ சமாளித்து பைனல் வரை வந்தோம். இறுதிப் போட்டியில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். இப்போட்டி மிகவும் தமாஷாக இருந்தது என்று தான் சொல்வேன்.

கோப்பை வெல்லும் வாய்ப்பை நாங்கள் பரஸ்பரம் தானம் செய்து கொண்டே இருந்தோம்! இரண்டு தரப்பிலுமே நிறைய தவறுகள் செய்தோம். ஒரு தவறு குறைவாக செய்த அணி வெற்றி பெற்றிருக்கிறது என நினைக்கிறேன். அடுத்த சீசன் பற்றி இப்போது எதுவும் சொல்ல முடியாது. இப்போதைக்கு உலக கோப்பை தொடரில் முழு கவனம் செலுத்துவது முக்கியம். அதன் பிறகு சிஎஸ்கே பற்றி பேசலாம்.

அடுத்த ஆண்டு மீண்டும் சந்திப்போம் என நம்புகிறேன்’ என்றார். 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதல் பரிசாக ரூ.20 கோடியை தட்டிச் சென்றது. சென்னை அணிக்கு ரூ.12.5 கோடியும், 3வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்த டெல்லி, ஐதராபாத் அணிகளுக்கு முறையே ரூ.10.5 கோடி, ரூ.8.5 கோடி கிடைத்தது.


Tags : Rohit Sharma , Integrated effort, success, Rohit Sharma, proud
× RELATED இரண்டு சோதனைகளையும் நாம் அனைவரும்...