முத்தரப்பு ஒருநாள் தொடர் வங்கதேசத்துக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் திணறல்

டப்ளின்: முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில், வங்கதேசத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி ரன் குவிக்க முடியாமல் திணறியது. அயர்லாந்தில் நடைபெற்று வரும் இந்த தொடரின் 5வது போட்டியில் வங்கதேசம் - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் நேற்று மோதின. டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஜேசன் ஹோல்டர் முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். தொடக்க வீரர்களாக ஷாய் ஹோப், அம்ப்ரிஸ் களமிறங்கினர்.

அம்ப்ரிஸ் 23 ரன் எடுத்து வெளியேற, அடுத்து வந்த டேரன் பிராவோ 6 ரன் மட்டுமே எடுத்து மெகதி ஹசன் மிராஸ் பந்துவீச்சில் எல்பிடபுள்யு ஆனார். ரோஸ்டன் சேஸ் 19, ஜொனாதன் கார்ட்டர் 3 ரன்னில் பெவிலியன் திரும்பினர். வெஸ்ட் இண்டீஸ் 23.1 ஓவரில் 99 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ஷாய் ஹோப் - கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஜோடி 5வது விக்கெட்டுக்கு சிறப்பாக விளையாடி 100 ரன் சேர்த்தது. இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

ஹோப் 87 ரன் (108 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), ஹோல்டர் 62 ரன் (76 பந்து, 3 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி மோர்டசா பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த பேபியன் ஆலன் 7, ஆஷ்லி நர்ஸ் 14, ரேமன் ரீபர் 7 ரன்னில் அணிவகுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன் எடுத்தது. கெமார் ரோச் 3, காட்ரெல் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேச பந்துவீச்சில் முஸ்டாபிசுர் ரகுமான் 4, மோர்டசா 3, மிராஸ், ஷாகிப் ஹசன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 248 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் களமிறங்கியது.


Tags : West Indies ,Bangladesh , One-day series, Bangladesh, West Indies, Thunder
× RELATED மகளிர் கிரிக்கெட் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது இந்தியா