×

கக்கன் குடும்பத்தினருடன் கே.எஸ்.அழகிரி சந்திப்பு: 3வது அணிக்கு சாத்தியமே இல்லை என பேட்டி

சென்னை: கக்கன் குடும்பத்தினரை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நேற்று சந்தித்து பேசினார். முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கக்கன் சைதாப்பேட்டை சிஐடி நகரில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்தார். அவரது மறைவுக்கு பின்பு அவரது மகன் டாக்டர் சந்தியநாதன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த இல்லத்தை காலி செய்யும்படி அரசு தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று அந்த இல்லத்துக்கு சென்று கக்கனின் மகன் சந்தியநாதன் குடும்பத்தினரை சந்தித்து பேசினார். அவருடன் வசந்தகுமார் எம்எல்ஏ, மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன் மற்றும் நிர்வாகிகள் சென்றனர்.

பின்னர் கே.எஸ்.அழகிரி பேட்டியளிக்கையில், ‘‘கக்கன், நல்லகண்ணு போன்றவர்கள் எல்லாம் மக்களுக்காக வாழ்ந்தவர்கள். இவர்களுக்கு எந்தவித சொத்தும் கிடையாது. இவர்கள் குடும்பத்தினர் தற்போதும் ஏழ்மை நிலையில்தான் வாழ்ந்து வருகின்றனர். தற்போது இரு குடும்பத்தினருக்கும் மாற்று வீடு வழங்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 3வது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சந்திரசேகர் ராவ், மு.க.ஸ்டாலினுடன் சந்திப்பு பற்றி கேட்கிறீர்கள். வீட்டுக்கு வருபவர்களை வர வேண்டாம் என்று சொல்ல முடியுமா? நட்பு ரீதியாக அவர் வந்து பார்க்கிறார். ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முன்மொழிந்துள்ளார். 3வது அணிக்கு சாத்தியமே இல்லை. எந்த இடத்திலாவது சந்திரசேகர் ராவ் 3வது அணி அமைக்கப்படும் என்று சொல்லியிருக்கிறாரா? மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பார்க்க வருகிறார். அப்படியே மு.க.ஸ்டாலினை நட்புரீதியாக சந்திக்கிறார். 3வது அணி அமைப்பதற்காகத்தான் சந்திக்க உள்ளதாக நீங்கள் கேள்வி எழுப்பது ஒரு யூகம் தான்’’ என்றார்.  



Tags : KS Azhagiri ,meeting ,Kakkan ,team , Kakkan, KS Azhagiri, meeting
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...