×

கலெக்டர்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் குறித்து நாளை பயிற்சி: துணை தேர்தல் ஆணையர்கள் அளிக்கிறார்கள்

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து கலெக்டர்கள் (தேர்தல் அதிகாரிகள்) வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து துணை தேர்தல் ஆணையர்கள் நாளை சென்னையில் பயிற்சி அளிக்கிறார்கள். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 18ம் தேதி நடந்து முடிந்துள்ளது. இந்த தொகுதிகளில் பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் 45 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து காலியாக உள்ள 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மற்றும் 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு வருகிற 19ம் தேதி நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து வருகிற 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கைக்கான முன்னேற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. அதன்படி, இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணுவதுடன், ஒரு சட்டமன்ற தொகுதியில் பதிவான 5 விபிபேட் இயந்திரங்களில் உள்ள ஒப்புகை சீட்டுகளையும் எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்தல் முடிவுகள் 23ம் தேதி உடனடியாக தெரிய வாய்ப்பில்லை என்றும் 24ம் தேதி வரை தள்ளிப்போகலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், வருகிற 23ம் தேதி வாக்கு எண்ணிக்கையின்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து விவாதிக்கவும், பயிற்சி அளிக்கவும் டெல்லியில் இருந்து இந்திய துணை தேர்தல் ஆணையர்கள் சந்தீப் சக்சேனா, சுதீப் ஜெயின் ஆகியோர் நாளை தமிழகம் வருகிறார்கள். இவர்கள், தமிழகத்தில் உள்ள 32 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்கள்) சென்னையில் நாளை காலை 10 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த கூட்டம், சென்னை சின்னமலையில் உள்ள ரமடா பிளாசா ஓட்டலில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் பாலாஜி, ராஜாராமன் மற்றும் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

இந்த கூட்டத்தில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வருகிற 23ம் தேதி, வாக்குப்பெட்டி இயந்திரங்களில் உள்ள வாக்குகளை எண்ணும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. மேலும், விவிபேட் இயந்திரத்தில் பதிவான ஒப்புகை சீட்டுக்களை எண்ணும்போது என்னென்ன நடைமுறைகளை பின்பற்றி வேண்டும், முடிவுகளை பொதுமக்களுக்கும், அரசியல் ஏஜென்டுகளுக்கும் தெரிவிக்க கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள், வாக்கு எண்ணிக்கை முடிந்தவுடன் இறுதி நிலவரங்களை எப்படி குழப்பம் இல்லாமல் தெரிவிப்பது என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
காரணம், தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பாதுகாப்பாக வாக்குப்பெட்டிகள் வைத்துள்ள மையங்களில் சில குளறுபடிகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதனால், வாக்கு எண்ணிக்கையின்போது இதுபோன்ற எந்தவித குற்றச்சாட்டுகளும், குழப்பங்களும் இல்லாமல் நேர்மையாக நடத்தி முடிக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கும்படி தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் வற்புறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : training ,Election Commissioners , Collector, Vote count, Deputy Election Commissioners
× RELATED ஊர்க்காவல் படை பயிற்சி நிறைவு விழா