×

காவிரி பாசன பகுதிகளை காக்க மக்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம்: முத்தரசன்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நேற்று வெளியிட்ட அறிக்கை: காவிரிப் பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில், மக்கள் நலனில் சிறிதும் அக்கறையில்லாத மத்திய அரசு நாகப்பட்டினம், கடலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் தற்போது 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் மூலம் அனுமதியளித்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக ஹைட்ரோ கார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைக்க அனுமதி அளித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறோம். தமிழ்நாடு அரசு இப்பிரச்னையில் மவுனம் காப்பதன் மூலம் இதனை ஏற்பதற்கு ஒப்புதல் அளிக்கிறதா என்பதனை தெளிவுபடுத்திட வேண்டும்.

மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத இச்செயல்பாட்டினை கண்டிப்பதுடன், காவிரிப்பாசனப் பகுதி மக்களை ஒருங்கிணைத்தும், ஒன்றுபடுத்தியும் கார்ப்பரேட் நிறுவனங்களை வெளியேற்றவும் வேளாண் மண்டலத்தை பாதுகாக்கவும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும்.

Tags : Cauvery ,irrigation areas ,Muthrasaran , Cauvery, Struggle, Muthrasan
× RELATED அரவக்குறிச்சியில் குழாய் உடைந்து 3 மாதமாக வீணாகும் குடிநீர்