×

இளம்பிள்ளை அருகே பரபரப்பு: குடிநீர் கேட்டு பிடிஓ அலுவலகம் முற்றுகை, சாலை மறியல்

இளம்பிள்ளை: சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகேயுள்ள இடங்கணச்சாலை பேரூராட்சிக்கு உட்பட்ட 11வது மற்றும் 12வது வார்டு பகுதியில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு மேட்டூர் கூட்டு  குடிநீர் திட்டத்தின் மூலம் வாரம் ஒருமுறை அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் இடங்கணசாலை பேரூராட்சி அலுவலர்களிடம் பல முறை புகார் தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் உரிய  பதில் அளிக்காததால் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை இளம்பிள்ளை-கே.கே.நகர் சாலையில் அமர்ந்து காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர்.
 
இதேபோல், இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு பகுதியிலும் கடந்த ஒரு மாதமாக முறையான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை கண்டித்து  அப்பகுதி மக்கள் அங்குள்ள பிடிஓ அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த அதிகாரிகள் முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதன்பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Tags : office ,Pillaiyalai ,BTO , Water pump, drinking water, PDO office, blockade, road strokeater
× RELATED மழையால் நிரம்பிய கிணறு