×

சாதி சான்றிதழ் கோரி கலெக்டர் வீடு முற்றுகை: ராமநாதபுரத்தில் பரபரப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இன்று காலை சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, கலெக்டர் வீட்டை முற்றுகையிட்டு பழங்குடியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ராமநாதபுரம் மாவட்டத்தில் மண்டபம், ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காட்டுநாயக்கர் இனத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இதுவரை  இவர்களுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால் இவர்களது குழந்தைகள் 9ம் வகுப்புக்கு மேல் படிப்பை தொடர முடியாத நிலை உள்ளது.  தங்களது குழந்தைகள் பள்ளி படிப்பை தொடரும் வகையில் சாதி சான்றிதழ் வழங்க கோரி இந்த சமுதாயத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல்வேறு  போராட்டங்களை நடத்தியுள்ளனர். ஆனால் அதிகாரிகள்  அவர்களது கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. இந்நிலையில் அந்த சமுதாயத்தை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் இன்று காலை ராமநாதபுரம் கலெக்டர் வீட்டிற்கு குழந்தைகளுடன் வந்தனர்.

பின்னர், சாதி சான்றிதழ் வழங்க  வலியுறுத்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பணியிலிருந்த போலீசார், வீட்டில் கலெக்டர் இல்லை என்று அவர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து ஆர்டிஓ அலுவலகத்திற்கு சென்ற பழங்குடியினர், அங்கு முற்றுகை போராட்டத்தை தொடர்ந்தனர்.  தகவலறிந்து வந்த ஆர்டிஓ சுமன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.  பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள், வழிபாடு மற்றும் தொழில் குறித்து மானுடவியல் குழுவினர் ஆய்வு செய்து அறிக்கை தந்த பின்னர் சாதி  சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் சுமன் உறுதியளித்தார்.

மேலும் ஆய்வு நடத்துவது தொடர்பாக, தலைமை அலுவலகத்தில் தகவல் தெரிவித்து பதில் பெற 2 மணி நேரமாகும் என்று முற்றுகையில் ஈடுபட்டவர்களிடம் கூறினார். ஆனால் இதனை ஏற்க மறுத்த பழங்குடியினர், அங்கிருந்து  கலைந்து செல்ல மறுத்தனர்.
போராட்டம் குறித்து காட்டு நாயக்கர் சங்க கெளரவத் தலைவர் முருகன் கூறுகையில், ‘‘எங்கள் இனத்தை சேர்ந்த குழந்தைகள் சாதி சான்றிதழ் இல்லாமல் தொடர்ந்து கல்வி கற்க முடியவில்லை. இதனால் கூலி வேலை  செய்து பிழைக்கும் நிலை தொடருகிறது. அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.



Tags : Cottage Collector , Caste Certificate, Collector House, Siege, Ramanathapuram
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...