×

ஓமன் நாட்டிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு கடத்திவரப்பட்ட ரூ.8 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

திருவனந்தபுரம்: விமானம் மூலம் ஓமன் நாட்டில் இருந்து திருவனந்தபுரத்துக்கு கடத்தி வரப்பட்ட சுமார் 8 கோடி மதிப்புள்ள 25 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டது. தங்கத்தை கடத்தி வந்த சுனில் என்பவரை கைது செய்து வருவாய் புலனாய்வுத்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். வெளிநாட்டில் இருந்து திருவனந்தபுரம் பகுதிக்கு வரும் விமானத்தில் ஏராளமான தங்கம் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை மற்றும் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், விமான நிலையத்திற்கு வரும் அனைத்து பயணிகளிடமும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதைதொடர்ந்து, இன்று காலை ஓமன் நாட்டிலிருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்த பயணிகளிடம் சோதனை நடத்தினர். அப்போது, பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் வெகு துல்லியமாக சோதனையிட்டனர். அந்த சமயம், சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்திருந்த 2 பயணிகளை வருவாய் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அதில், பயணியின் பைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க பிஸ்கட்களை அதிகாரிகள் கைப்பற்றினர். சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பிலான 25 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவற்றை கடத்தி வந்த நபரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதன் காரணமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று தமிழகத்திலும் விமானம் மூலம் தங்கம் கடத்தப்பட்டு வருகிறது. நேற்றையதினம், துபாயிலிருந்து திருச்சிக்குக் கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகளைச் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ராஜா என்பவர் ரூ. 5.63 லட்சம் மதிப்புடைய தங்கத்தைத் தனது பெட்டிக்குள் மறைத்து வைத்துக் கடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Oman ,airport ,Trivandrum , Trivandrum, airport, gold, confiscation
× RELATED யுஏஇ, ஓமனில் கனமழை: 18 பேர் பலி