×

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் சாமி தரிசனம்

சென்னை : திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்தார். ஸ்டாலின் -  சந்திரசேகர ராவ்  சந்திப்பின் போது, திமுக பொருளாளர் துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உள்ளனர்.

3வது கூட்டணியை அமைக்கும் முயற்சியில் சந்திரசேகர ராவ்


தெலங்கானா ராஷ்டிரிய சமீதி தலைவரும், தெலங்கானா முதல்வருமான சந்திரசேகர ராவ் (கேசிஆர்), மத்தியில் பாஜ, காங்கிரஸ் அல்லாத 3வது கூட்டணியை அமைக்கும் முயற்சியை கடந்த ஓராண்டாகவே மேற்கொண்டார். அதற்கான பணிகளை மக்களவை தேர்தலுக்கு முன்பாக தொடங்கிய அவர், பல்வேறு மாநில கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து பேசினார். மக்களவை தேர்தல் காரணமாக, 3வது கூட்டணிக்கான முயற்சிகளை கேசிஆர் தற்காலிகமாக நிறுத்தியிருந்தார்.

மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்த கேசிஆர் திட்டம்

ஆனாலும், தேர்தல் முடிவுக்குப் பின் 3வது கூட்டணி நிச்சயம் உதயமாகும் என டிஆர்எஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்நிலையில், மக்களவை தேர்தல் முடிய 1 கட்ட வாக்குப்பதிவுகளே எஞ்சியுள்ள நிலையில், சந்திரசேகர ராவ் மீண்டும் 3ம் கூட்டணிக்காக முயற்சியை கையிலெடுத்துள்ளார். அதன்படி கேரளாவுக்கு சென்ற சந்திரசேகர ராவ் திருவனந்தபுரத்தில் அம்மாநில முதல்வர் பினராய் விஜயனை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து  மே 13ம் தேதி சந்திரசேகர ராவ் சென்னை வர உள்ளதாகவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து பேச இருப்பதாகவும் திட்டமிடப்பட்டு இருந்தது.

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் கேசிஆர் சாமி தரிசனம்


இந்நிலையில் தனி விமானம் மூலம் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் நேற்று சென்னை வந்தார். பின்னர் இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். அவருடன் கட்சி எம்பிக்கள் வினோத் குமார், சந்தோஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். அப்போது அந்த கோயிலில் மேளதாளம் முழங்க மாலை அணிவித்து சந்திரசேகர ராவ் உள்ளிட்டோருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் கோவிலுக்கு உள்ளே சென்ற அவர்கள் ஒரு மணி நேரத்திற்கும் அதிகமாக சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் முடிந்து வெளியே வந்த சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் தரிசனம் சிறப்பாக அமைந்ததாக கூறினார். மேலும் தன் வாழ்விலேயே சிறந்த புனித யாத்திரையாக இதனை கருதுவதாகவும் தரிசனத்தின் போது பக்தி பரவசத்தில் மூழ்கியதாகவும் சந்திரசேகர ராவ் கூறினார்.

 ஸ்டாலினுடன், சந்திரசேகர ராவ் சந்திப்பு


இதைத் தொடர்ந்து சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டில் திமுக தலைவர் ஸ்டாலினுடன், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திப்பு மேற்கொண்டார். இந்த சந்திப்பின் போது துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோரும் உடன் உள்ளனர். தேர்தல் முடிவிற்கு பிறகு மத்தியில் கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக ஸ்டாலினுடன் சந்திரசேகர ராவ் விவாதிக்கிறார்.


Tags : Telangana ,CM Chandrasekara Samy Darshan ,Srirangam Aranganathar , Telangana, Chief Minister, Chandrasekara Rao, Congress, Stalin, DMK
× RELATED பெட்ரோல் பங்கிற்கு டீசல் பிடிக்க வந்த...