சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை : பாரிவேந்தர் அறிவிப்பு

பெரம்பலூர் : மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் தலைவர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார்.

கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இலக்கியா 2 தங்க பதக்கங்கள்

பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சென்னை கோடம்பாக்கத்தில் குடும்பத்துடன் தங்கி, கோயம்பேடு சந்தையில் சுமை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார். இவருடைய 14 வயதுடைய மகள் இலக்கியா தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுவயது முதலே கராத்தே மீது அதிக ஈடுபாடு கொண்ட மாணவி இலக்கியா, கடந்த நான்கு ஆண்டுகளாக கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற, சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில், 19 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், இந்தியா சார்பாக மொத்தம் 21 பேர் பங்கேற்றனர். அதில் தமிழகத்தை சேர்ந்த 4 பேரில் மாணவி இலக்கியாவும் ஒருவர். மொத்தம் எட்டு நாடுகள் பங்கேற்றப்பட்ட போட்டியில், பல சுற்றுகளில் வெற்றி பெற்று, இறுதி போட்டிகளில் இரண்டு தங்க பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார் மாணவி இலக்கியா.

எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை

இந்நிலையில் மாணவி இலக்கியாவிற்கு எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் சார்பில் ரூ.3 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று இந்திய ஜனநாயகக் கட்சி நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தை சேர்ந்த மாணவி இலக்கியா தங்கப்பதக்கம் பெற்றதற்கு தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கிறார். மாணவி இலக்கியா எதிர்காலத்தில் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு சாதனை படைக்க விரும்பினால் அதற்கான உதவிகளும் செய்துதரப்படும் என்று பாரிவேந்தர் கூறியுள்ளார். 

Related Stories: