×

ஃபானி புயல் பாதிப்பு: ஒடிஷாவுக்கு ரூ.10 கோடி நிவாரண நிதி வழங்கியது தமிழக அரசு

ஒடிசா: ஒடிசா மாநிலத்திற்கு ஃபானி புயல் பாதிப்புக்காக ரூ.10 கோடி நிவாரணத்தை தமிழக அரசு வழங்கியது.  ஃபானி புயல் பாதிப்புக்கு ரூ.10 கோடி நிதியுதவி வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் மொகந்தியிடம் நிதித்துறை கூடுதல் செயலாளர் சண்முகம் காசோலையை வழங்கினார்.

ஒடிசாவை புரட்டிப்போட்ட ஃபானி புயல்

வங்கக் கடலில் உருவான ஃபானி புயல் கடந்த மூன்றாம் தேதியன்று காலை ஒடிசா மாநிலம் பூரி அருகே கரையை கடந்தது. அப்போது 175 முதல் 230 கிலோ மீட்டர் வேகத்தில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. இதனால் ஒடிசா மாநிலத்தின் 14 மாவட்டங்களில் மிக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஒடிசா மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளை ஃபானி புயல் புரட்டிப்போட்டது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புயல் மழையால் மிக கடுமையான சேதத்தை ஒடிசா மாநிலம் சந்தித்துள்ளது. ஃபானி புயலால், ஒடிசாவின் 14 மாவட்டங்களில் உள்ள 14,000 கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.

புயலால் ஏற்பட்ட பாதிப்புகளில் பலியானோர் எண்ணிக்கை 64 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மின்சாரம், குடிநீர் வசதிகள், தொலைத் தொடர்பு சேவை ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவற்றை சீரமைக்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெறுகின்றன. அதேபோல், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், மாநில அரசு ரூ.1,600 கோடி அறிவித்தது. இருப்பினும், புயலால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான பகுதிகளில் இன்னமும் இயல்பு நிலை திரும்பவில்லை. மின்சாரம் இன்றி பல இடங்கள் இருளில் மூழ்கியுள்ளன. குடிநீர் இன்றி மக்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகியுள்ளனர்.

ரூ. 10 கோடி நிவாரண நிதியை வழங்கியது தமிழக அரசு

இந்நிலையில்,  பாதிக்கப்பட்ட ஒடிசா மாநிலத்திற்கு பல்வேறு மாநிலங்கள் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் நிதியுதவி, பொருள் உதவி செய்யப்பட்டு வருகிறது. தமிழக அரசும் ஒடிசா மாநிலத்திற்கு உதவிக்கரம் நீட்டும் வகையில் தமிழக முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து 10 கோடி ரூபாய் நிதி உதவி வழங்குவதாக கடந்த 5ம் தேதி அறிவித்தது. இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் சென்னையில் உள்ள ஒடிசா பவன் மேலாளர் ரஞ்சித் குமார் மொகந்தியை சந்தித்த நிதித்துறை கூடுதல் செயலாளர் சண்முகம் ரூ. 10 கோடிக்கான காசோலையை வழங்கினார்.


Tags : Odisha , Tamil Nadu Government, Fanni Storm, Relief Fund, Orissa
× RELATED “ஒடிசாவில் ஆட்சியமைப்பது பற்றி பாஜக...