×

காஷ்மீரில் மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டிய 2 தீவிரவாதிகள் கைது: ராணுவம் அதிரடி

ரம்பான்: ஜம்மு காஷ்மீரில் புல்வாமா தாக்குதலை போன்று மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதலை அரங்கேற்ற இருந்த 2 தீவிரவாதிகளை பாதுகாப்புப்படையினர் கைது செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீரின் ரம்பான் மாவட்டத்தில் உள்ள கூல் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து பாதுகாப்புப்படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து நேற்று இரவு தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் பதுங்கியிருந்த 2 தீவிரவாதிகளை சுற்றிவளைத்த பாதுகாப்புப்படையினர் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் மற்றும் குவியல், குவியலாக ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து நடத்திய விசாரணையில் அவர்கள் புல்வாமா தாக்குதலை போன்று மற்றுமொரு பயங்கரவாத தாக்குதலை நிகழ்த்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அவர்களை கைது செய்ததன்மூலம் சதித்திட்டம் தவிர்க்கப்பட்டது. அவர்கள் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

ஜம்மு காஷ்மீரின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து பாகிஸ்தானில் இயங்கி வந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் மீது இந்திய விமானப்படை சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது. இதில் ஏராளமான பயங்கரவாதிகள் மாண்டனர். இதனையடுத்து எல்லையில் பதற்றம் அதிகரித்தது. மேலும் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்திற்கு பாகிஸ்தான் ஆதரவு அளித்ததற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. இதன் விளைவாக ஜெய்ஷ்-இ-முகமது இயக்கதின் தலைவன் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா. அறிவித்தது. இருப்பினும் எல்லையில் பதற்றம் குறைந்தபாடில்லை. இருநாடுகளும் பேசி சுமூக தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Tags : terrorists ,terror attack ,Kashmir ,Military Action , Jammu And Kashmir, Ramban, Terrorist,
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...