×

விவசாயிகள் பெயரில் கடன் பெற்று மோசடி: உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கடலூர்: விவசாயிகள் பெயரில் கடன் பெற்று திருப்பி செலுத்தாத சர்க்கரை ஆலை அதிபர் தியாகராஜரிடம் உடனடியாக விசாரணை நடத்தக்கோரி தஞ்சை, கடலூர் விவசாயிகள் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 4 சர்க்கரை ஆலைகளின் உரிமையாளர் தியாகராஜன். இந்த ஆலைக்கு 11,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் 500 கோடிக்கு மேல் கரும்பு கொள்முதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், 11,526 விவசாயிகளுக்கு பல கோடிக்கு மேல் கரும்பு நிலுவை தொகையை பாக்கி வைத்துள்ளார். இந்த பாக்கி தொகையை கேட்டு விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டத்தை நடத்தி வந்தனர். இதற்கிடையில், ஆளும் நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் பெயரிலேயே கடன் பெற்று நிலுவை தொகையை வழங்குவதாக ஒப்புதல் அளித்துள்ளார். ஆனால் முன்னதாகவே, விருத்தாச்சலம், திட்டக்குடி, கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டி வரும் ஸ்டேட் பேங்க் மற்றும் கார்பொரேஷன் வங்கிகளில் விவசாயிகளுக்கு தெரியாமல் அவர்களின் பெயர், ஆவணங்கள் மற்றும் கையொப்பங்களை கொண்டு வங்கி கடன்களை பெற்று மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, கடன் தொகையை செலுத்துமாறு விவசாயிகளுக்கு வங்கிகளிடம் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது. மீறினால் வீடு மற்றும் நிலங்கள் ஜப்தி செய்யப்படும் என வங்கி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக விவசாயிகள் அளித்த புகாரில், கடந்த 1ம் தேதி கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் சர்க்கரையாளர் உரிமையாளர் தியாகராஜனை கைது செய்துள்ளனர். 10 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது. அந்த விசாரணையில், அவர் வங்கிகளில் செய்த மோசடி அம்பலமானது. கடலூர் மாவட்டத்தில் மட்டும் 4,228 விவசாயிகள் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் 1,088 விவசாயிகளின் வங்கி கணக்கில் கடன் பெற்றுள்ளார். ரூ.5,140 கோடி கடன் பெற்றுள்ளதாக தகவல் கூறப்படுகிறது. இந்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விவசாய சங்கத் தலைவரான ஐய்யாக்கண்ணு தலைமையில் தற்போது ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. விசாரணையில் தோய்வு ஏற்பட்டுள்ளதாகவும், சர்க்கரை ஆலை உரிமையாளர் செய்த மோசடியை வெளிச்சத்திற்கு கொண்டுவர வேண்டும் எனவும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : owner , Farmers, demonstration, credit, fraud, Cuddalore
× RELATED உணவக உரிமையாளர் மீது தாக்குதல்: பாஜக நிர்வாகி கைது