×

திருமங்கலத்தில் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் பிரச்னைக்கு தீர்வு எப்போது?

திருமங்கலம்: திருமங்கலம் வெளியூர் பஸ் ஸ்டாண்டில் தண்ணீர் வசதிகள் கூட இல்லாமல் பயணிகள் தவித்து வருகின்றனர். திருமங்கலம் போலீஸ் ஸ்டேசன் எதிரே மதுரை ரோட்டில் தற்காலிகமாக வெளியூர் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக கழிப்பறை, குடிநீர் குழாய், நிழற்குடை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளின்றி இயங்கும் ஒரே பஸ் ஸ்டாண்டாக திருமங்கலம் வெளியூர் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. மதுரை மாநகரின் தென்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் மாட்டுதாவணி செல்வதை தவிர்த்து திருமங்கலத்தில் பஸ் ஏறி வெளியூர் செல்கின்றனர். இதனால் திருமங்கலம் வெளியூர் பஸ் ஸ்டாண்டில்தான் தென்மாவட்ட வெளியூர் பஸ்களில் அதிக கூட்டம் ஏறும் நிலை தொடர்கிறது.a

அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு அதிகளவில் லாபம் பெற்றும் தரும் இந்த பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் எதுவுமில்லாதது பயணிகளிடம் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. இந்நிலையில் மதுரை ஐகோர்ட் திருமங்கலம் வெளியூர் பஸ் ஸ்டாண்டில் பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் வழங்கவேண்டும் என நகராட்சிக்கு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து இந்த பஸ் ஸ்டாண்டில் தற்காலிகமாக ஒரு தண்ணீர் தொட்டியை அமைத்து சிறிது காலம் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் தரப்பட்டது. இந்தநிலையில் இந்த குடிநீர் பைப்களை சமூக விரோதிகள் சேதப்படுத்தவே தற்போது தண்ணீர் தொட்டி காட்சி பொருளாக வெளியூர் பஸ் ஸ்டாண்டில் காட்சி தருகிறது. இதனால் வழக்கம் போல் பஸ்சிற்கு வெயிலில் காத்திருக்கும் பயணிகள் விலைக்கு குடிநீர் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது சுட்டெரிக்கும் கோடை வெயிலில் நிழற்குடை, குடிநீர் இன்றி வெளியூர் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் தவித்து வருகின்றனர். வெளியூர் பஸ் ஸ்டாண்ட் பிரச்னைக்கு உரிய தீர்வினை அதிகாரிகள் கண்டறித்து பொதுமக்களின் சிரமத்தை குறைக்கவழிவகை செய்யவேண்டும் என்பதே திருமங்கலம் மக்களின் கோரிக்கையாகும்.

Tags : Tirumangalam , Tirumangalam, bus
× RELATED சென்னை திருமங்கலத்தில் உள்ள...