×

மழை பெய்யாததால் பிஏபி அணை நீர்மட்டம் சரிவு: விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை பொய்த்ததால் பிஏபி திட்ட அணைகளின் நீர் மட்டம் நாளுக்கு நாள் சரிந்து வருகிறது. இதனால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில், கடந்த ஆண்டில் சில மாதமாக தொடர்ந்து பெய்த தென்மேற்கு பருவமழையால், பிஏபி திட்டத்திற்குட்பட்ட பரம்பிக்குளம் மற்றும் ஆழியார் அணைகளின் நீர்மட்டம், மழை பெய்த சில மாதங்களில் முழு அடியையும் எட்டியது. ஆனால், வடகிழக்கு பருவமழை பொய்த்ததுடன், இந்தாண்டு துவக்கத்தில் இருந்து மழை இல்லாததால் அணைகளுக்கு தண்ணீர் வரத்து குறைந்து, நீர்மட்டம் மீண்டும் சரிய துவங்கியது. இதில், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே மொத்தம் 72 அடி கொண்ட பரம்பிக்குளம் அணைக்கு, கடந்த மூன்று மாதங்களாக தண்ணீர் வரத்து மிகவும் குறைந்ததுடன். சோலையார் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரும் நிறுத்தப்பட்டதால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் சரிந்தது.

வெகுநாட்களுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு வாரமாக அவ்வப்போது கோடை மழை பெய்திருந்தாலும், அணைக்கு எதிர்பார்த்த அளவில் தண்ணீர் வரத்து இல்லாமல் போனது. அதன்பின், வெயிலின் தாக்கம் அதிகரித்து, மழை பொய்த்ததால் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து மிக குறைவாக இருந்தது. இதில், நேற்றைய நிலவரப்படி அணைக்கு தண்ணீர் வரத்து வினாடிக்கு வெறும் 15 கன அடியாக இருந்தது. நீர் மட்டம் 20 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், திருமூர்த்தி அணைக்கு பாசனத்திற்காக வினாடிக்கு 750 கன அடி தண்ணீர் திறப்பு தொடர்ந்துள்ளது. அதுபோல், பொள்ளாச்சியை அடுத்த 120அடி கொண்ட ஆழியார் அணைக்கும், தற்போது மழை பொய்த்ததால் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வரை காடாம்பாறை மற்றும் அப்பர் ஆழியார் அணையிலிருந்து வினாடிக்கு சுமார் 200 கன அடிவீதம் தண்ணீர் வரத்து இருந்தது. பின்னர், அப்பர் ஆழியார் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தத்தாலும், மழை பொய்ததாலும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்தது. நேற்றைய நிலவரப்படி தண்ணீர் வரத்து வினாடிக்கு 50 கனஅடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தற்போது 63 அடியாக உள்ளது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : PAP , Pollachi, rain, PAP dam, water level, farmers
× RELATED பிஏபி முதலாம் மண்டல பாசன கால்வாயில்...