×

அன்னிய செலாவணி மோசடி வழக்கு: சசிகலா ஆஜராகவில்லை

சென்னை: அன்னிய செலாவணி மோசடி வழக்கு விசாரணைக்கு சசிகலா இன்று ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணை மே-28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. சசிகலா, அவரது அக்கா மகன் பாஸ்கரன் ஆகியோர் 1996 - 97  ஆண்டுகளில் வெளிநாடுகளில் இருந்து ஜெஜெ டிவிக்கு எலெக்ட்ரானிக் பொருட்கள் வாங்கியதில் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கொடநாடு டீ எஸ்டேட் வாங்கியதில் பல கோடி ரூபாய் வெளிநாடுகளில் இருந்து பறிமாற்றம் செய்துள்ளதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அமலாக்கத்துறையினர் சசிகலா மீது 4 வழக்குகள் பதிவு செய்தனர். இந்த வழக்கில் சசிகலா மற்றும் பாஸ்கரன் மீது கடந்த 2017ம் ஆண்டு மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

ஆனால் குற்றச்சாட்டு பதிவுக்கு பின்பு சசிகலா தரப்பினர் வழக்கு விசாரணைக்கு சரியாக ஆஜராகவில்லை, குற்றச்சாட்டு பதிவில் சசிகலா கையெழுத்திடவில்லை என்று கூறப்பட்டது. இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் சசிகலா மீது மறு குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. அப்போது சசிகலா தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று கூறி, அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் குறுக்கு விசாரணை செய்யும்படி கேட்டுக்கொண்டார். அதன்படி குறுக்கு விசாரணை நடத்தி முடிக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி குறுக்கு விசாரணை குறித்து கேள்வி கேட்பதற்காக சசிகலாவை இன்று நேரில் ஆஜர்படுத்த சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார். இதனை எதிர்த்து சசிகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சசிகலாவை வீடியோ கான்பரன்சில் ஆஜர்படுத்தி விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன்படி விசாரணைக்கு வீடியோ கான்பரன்சில் சசிகலா ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,  இன்று அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கு விசாரணை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Tags : Sasikala , Foreign Exchange, Fraud case, Sasikala
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது